Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விபத்தில் உயிரிழந்து உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் வாலிபர் இறுதிச்சடங்கு

ஆர்.கே.பேட்டை: சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. ஆர்.கே.பேட்டை தாலுகா ராஜாநகரம், மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன்(20). இவர் கடந்த 11ம் தேதி தனது நண்பர் முருகன்(20) என்பவரை அழைத்துக்கொண்டு, முருக்கம்பட்டு கிராமத்தில் இருந்து திருத்தணி நோக்கி பைக்கில் சென்றார். அப்போது, எதிரே வந்த பைக் புருஷோத்தமனின் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த புருஷோத்தமன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, இறந்த புருஷோத்தமனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்வந்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் புருஷோத்தமனின் கண், இதயம் மற்றும் இதய வால்வுகள், நுரையீரல், கல்லீரல், சிறுகுடல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, தானமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று புருஷோத்தமனின் உடல் ராஜாநகரம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்த புருஷோத்தமனின் உடலுக்கு, திருத்தணி ஆர்டிஓ கனிமொழி, தாசில்தார் உதயம் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, புருஷோத்தமனின் உடல் தகனம் செய்யப்பட்டது.