Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாவட்டத்தில் நடப்பாண்டு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 18,842 மாணவர்களுக்கு சேர்க்கை

சேலம், ஆக.4: சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 18,842 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டு சேர்க்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். அரசுப்பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் தொடங்கி, விலையில்லா பாடபுத்தகம், சீருடை என பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அத்துடன் அரசுப்பள்ளிகளில் படித்தவர்களுக்கு உயர்கல்வியில் சேர தனி இடஒதுக்கீடு வழங்கப்படுவதுடன், அந்த மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

நடப்பு 2025-2026ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1ம் தேதியன்று தொடங்கியது. அனைத்து பள்ளிகள் சார்பிலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தீவிர சேர்க்கை நடந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, நடப்பாண்டு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 18,842 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் வழங்கப்படாத பல்வேறு நலத்திட்டங்கள், தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ், சேலம் கல்வி மாவட்டம் மற்றும் தாரமங்கலம் கல்வி மாவட்டம் உள்ளன. இதில், 1,423 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 425 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,848 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டு மாணவர் சேர்க்கை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பலனாக இரு மாவட்டங்களையும் சேர்த்து, 18,842 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட சுமார் ஆயிரம் மாணவர் எண்ணிக்கை அதிமாகும். அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களைச் சேர்ப்பதில் மாநில அளவில் சேலம் மாவட்டம் சிறப்பிடத்தில் உள்ளது.

இதில், சேலம் கல்வி மாவட்டத்தில் மட்டும் 9,322 மாணவர்கள் 1 முதல் 8ம் வகுப்பு வரை சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முதல் வகுப்பில் மட்டும் தமிழ் வழியில் 4,903, ஆங்கில வழியில் 1,487 என மொத்தம் 6,390 பேர் சேர்ந்துள்ளனர். பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடக்கிறது. அதன்படி, எல்கேஜியில் 248 பேரும், யூகேஜியில் 195 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சேலம் கல்வி மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் 2,489 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலனோர் கடந்த கல்வியாண்டுகளில் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்துவிட்டு, நடப்பாண்டு அரசுப்பள்ளிகளுக்கு வந்து சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும். அத்துடன், விஜயதசமியன்று சிறப்பு மாணவர் சேர்க்கையும் நடத்தப்படவுள்ளது. இதனால், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதே சமயம், அரசுப்பள்ளில் உள்ள திட்டங்கள், சலுகைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக விழிப்புணர்வு பதாகைகளுடன், பேரணிகள், ஊர்வலங்கள் நடத்துதல், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கல்வித்துறை அதிகாரிகள்

தெரிவித்தனர்.