மதுரை: திருப்புவனம் அருகே, மடப்புரம் கோயில் ஊழியர் மரண வழக்கு தொடர்பான மதுரை மாவட்ட நீதிபதியின் விசாரணை அறிக்கை, ஐகோர்ட் கிளையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் இச்சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 போலீஸ்காரர்களில் பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அஜித்குமார் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலானய்வு குழுவின் விசாரணைக்கு மாற்றக்கோரி, வழக்கறிஞர் மாரீஸ்குமார், கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, அஜித்குமாரை தனிப்படை போலீசார் கட்டி வைத்து தாக்குவது தொடர்பான செல்போன் காட்சிகள் போட்டுக் காண்பிக்கப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள், ‘‘அஜித்குமாரை ஏன் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை. இளைஞரை விசாரிக்க வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? உடலில் எந்த உறுப்பையும் காவலர்கள் விட்டு வைக்கவில்லை. பதவி ஆணவத்தில் காவலர்கள் அஜித்தை கடுமையாக தாக்கியுள்ளனர். எப்ஐஆர் பதியாமல் சிறப்புப்படையினர் எப்படி வழக்கை கையில் எடுத்தனர்? இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்கக்கூடாது.
பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. போலீஸ் கூட்டாக சேர்ந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது என கூறிய நீதிபதிகள், திருப்புவனம் சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஏற்கத்தக்கது’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக மதுரை 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். நீதிபதி விசாரணை என்றால் நீதி விசாரணை என்றே அழைக்கப்படும். வழக்கில் சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. நாட்கள் செல்ல செல்ல சாட்சிகள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது. தனது விசாரணை அறிக்கையை ஜூலை 8ம் தேதி இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
ஐகோர்ட் கிளை உத்தரவின் பேரில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது நீதி விசாரணையை கடந்த 2ம்ட தேதி துவங்கி, 5ம் தேதி வரை 4 நாட்கள் நடத்தினார். திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் வைத்து தனது விசாரணையை நடத்தினார். மடப்புரம் கோயில் ஊழியர்கள், ஆட்டோ டிரைவர், அறநிலையத்துறை அதிகாரிகள், தாக்கும் வீடியோவை பதிவு செய்த சக்தீஸ்வரன், போலீசார், மருத்துவர் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார். தனது விசாரணை தொடர்பான அறிக்கையை பதிவு நீதிபதி பதிவுசெய்து கொண்டார்.இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் ஆஜராகி தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, அஜித் குமார் வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை டிஜிபி தரப்பில் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றி கெஜட்டில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது, அரசுத் தரப்பில் தேவையான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் தமிழ்நாடு அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. நீதிபதியும் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரித்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வேலை மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.


