ஏற்காடு: விடுமுறை தினமான இன்று ஏற்காடு, ஒகேனக்கல்லில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஏற்காட்டில் படகு சவாரி செய்தும், ஒகேனக்கல் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து சுற்றிப்பார்த்து செல்கின்றனர். வழக்கமான நாட்களை விட, வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலையில் கடும் பனி பொழிவு நிலவி வரும் நிலையில், நண்பகல் நேரத்தில் மிதமான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. விடுமுறை தினமான இன்று காலை 8 மணியில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, பக்கோடா பாயிண்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி, கரடியூர் காட்சி முனையம் போன்ற இடங்களில் கூட்டம் களை கட்டியது. ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு குடும்பத்தோடு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதேபோல் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லிலும் இன்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. எண்ணெய் மசாஜ் செய்து அருவி மற்றும் ஆற்றில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பரிசல் சாவரி செய்து காவிரியின் அழகை ரசித்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பூங்கா, பூலாம்பட்டி, முட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சி, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, ஜேடர்பாளையம் தடுப்பணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் இன்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.


