டெல்லி: ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2017ம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் அவர் சிறையில் இருக்கிறார். 36 வயதான நிமிஷா பிரியா 2020ம் ஆண்டு முதல் மரண தண்டனை கைதியாக இருந்து வருகிறார். மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 2023ல் நிராகரிக்கப்பட்டது. தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.
ஏமனின் ஷரியா சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திடம் ரத்தப் பணம் கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் நிமிஷா பிரியாவை காப்பாற்றக் கடைசியாக ஒரு வாய்ப்பு இருக்கிறது. எனவே, நிமிஷா பிரியா இந்த தண்டனையில் இருந்து காப்பாற்ற அவருடைய குடும்பமும், இந்திய அரசாங்கமும் முயற்சி செய்து வருகிறது. நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, கடந்த ஒரு வருடமாக ஏமனின் சனாவில் தங்கி, மெஹ்தியின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ரத்தப் பணம் வழங்கி மன்னிப்பு பெற முயற்சித்து வருகிறார்.
ஆனாலும், மெஹ்தியின் குடும்பத்தினர் இதற்கு உடன்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் நம்பிக்கை விடாமல் அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் முக்கிய முஸ்லிம் தலைவரும், கேரள இஸ்லாமிய தலைவருமான கந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலையீட்டால், நிமிஷாவை காப்பாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏமனில் முன்னேறி வருவதாக நம்பிக்கை எழுந்துள்ளது. அபூபக்கர், ஏமன் அரசை மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரியுள்ளார். இந்த கோரிக்கையை ஏமன் அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், அதனைத்தொடர்ந்து நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் நிர்வாகம் ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.