Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.48 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருச்செந்தூர் யாத்ரி நிவாஸ் விடுதி வரும் 14ம் தேதி முதல்வர் திறக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் ரூ.48 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதியை வரும் 14ம் தேதி காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தனியார் நிறுவனம் மற்றும் தமிழக அரசு சார்பில் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் திருக்கோயில் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகள் பணியும் நிறைவு பெற்றுள்ளது. இந்த பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, பக்தர்கள் இறை தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் நிற்காமல் விரைவாக தரிசனம் மேற்கொள்ளும் வகையில் தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருக்கோயில் வளாகத்தில் ரூ.48.36 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் 20 சிறப்பு அறைகள், 100 தங்கும் அறைகள் மற்றும் உணவகத்துடன் 540 பேர் தங்கும் வகையில் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை வரும் 14ம் தேதி காணொலி வாயிலாக திறந்து வைத்து, 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். கந்தசஷ்டி துவங்குவதற்கு முன்பாக யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும். முதல்வர் திறந்து வைத்த அடுத்த நாளிலிருந்து இதற்கான முன்பதிவு தொடங்கப்படும். பக்தர்கள் தங்கும் விடுதிக்கு நிர்ணயிக்கப்படும் கட்டணம் தனியார் விடுதியை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.