வத்திராயிருப்பு: ஆனி மாத பிரதோஷத்தையொட்டி இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இக்கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்து நிலையில், தற்போது தினமும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று ஆனி மாத பிரதோஷம் என்பதால், வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது.
திருநெல்வேலி, திருச்சி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே வந்த பக்தர்கள் தாணிப்பாறையில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷத்தையொட்டி இன்று மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.


