வழிபாட்டு தலம் இடித்து சேதம் சட்டீஸ்கரில் வன்முறை, கலவரம்: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்
ராய்பூர்: சட்டீஸ்கரில் இருதினங்களுக்கு முன் நடந்த வன்முறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். சட்டீஸ்கரில் விஷ்ணு தியோ சிங் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் பலடோபஜார் - பட்டாபரா என்ற மாவட்டத்தில் சத்னாமி சமூகத்தினரின் வழிபாட்டு தலம் உள்ளது. கடந்த திங்கள்கிழமை(10ம் தேதி) இந்த வழிபாட்டு தலத்தை அரசு தரப்பினர் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு கூடிய சத்னாமி சமூகத்தினர் அரசுக்கு எதிராக பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
பலடோபஜார் - பட்டாபரா பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மீது கற்களை வீசியெறிந்தும், கட்டைகளை கொண்டும் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில் பலடோபஜார் - பட்டாபரா மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.சவுகான் ,காவல் கண்காணிப்பாளராக இருந்த சதானந்த் குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.