Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இந்திய மகளிர் அணி சாம்பியன்: தெ.ஆ. வீழ்த்தி முதல்முறையாக பட்டம் வென்றது

நவிமும்பை: மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிருக்கான 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வந்தன. அதன்படி, நவி மும்பை, குவாகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூர் ஆகிய 4 இடங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன. பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் மட்டும், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றன.

இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை என 8 அணிகள் பங்கேற்றன. லீக் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 30ம் தேதி குவாகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

இந்தப் போட்டியில், 59 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. அதன்பிறகு பாகிஸ்தானுடனான போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர், நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்தியாவிற்கு தோல்வியே மிஞ்சியது. அதன்படி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளிடம் தலா 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பின்னர், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இறுதி வரை போராடி வெற்றியின் விளிம்புக்கு வந்த நிலையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிற்கு தோல்வி கிடைத்தது.

தொடர் தோல்வியால் இந்தியா அரைஇறுதிக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 4வது அணியாக அரைஇறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது. இதையடுத்து, கடந்த 30ம் தேதி நடைபெற்ற 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியனும் பலம் வாய்ந்த அணியுமான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய அணி. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 338 ரன்களை எட்டி பிடித்த இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

இதற்கிடையில் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அணி, அடுத்து நடைபெற்ற 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. கடந்த 29ம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி.

2 அணிகளும் இதுவரை உலகக்கோப்பையை கைப்பற்றாத நிலையில் புதிய சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிபோட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீசியது. இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 104 ரன்களை சேர்த்தனர். 18வது ஓவரில் மந்தனா (45 ரன்) ஆட்டமிழக்க, 28வது ஓவரில் ஷபாலி வர்மா (78 பந்து, 2 சிக்சர், 7 பவுண்டரி, 87 ரன்) அவுட்டானார். அதன் பின் இந்திய அணி ரன் குவிப்பில் தொய்வு ஏற்பட்டது.

ஜெமிமா ரோட்ரிகஸ் 24, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 20, அமன்ஜோத் கவுர் 12, ரிச்சா கோஷ் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இடையில் வந்து சிறப்பாக ஆடிய தீப்தி சர்மா 58 பந்துகளில் 58 ரன் எடுத்து இன்னிங்சின் கடைசி பந்தில் ரன் அவுட்டானார். 50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்தது. இதையடுத்து, களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை எடுத்தது. இதனால், இந்தியா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன ஒரு தருணம்! நமது பெண்கள் அணி ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்றதில் இந்தியா உச்சத்தில் உள்ளது! திறமை, அமைதி மற்றும் குழுப்பணியின் அற்புதமான வெளிப்பாட்டிற்காக இந்தியா அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றி தலைமுறையினரை பெரிய கனவுகளைக் காணவும் தைரியமாக விளையாடவும் ஊக்குவிக்கும்,’என்று கூறப்பட்டுள்ளது.