சென்னை: உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி, சென்னையில் கடந்த 9ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற போட்டியில், இந்தியா, தென்னாபிரிக்கா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், சீனா, எகிப்து, போலந்து, பிரேசில், சுவிட்சர்லாந்து, உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் மூத்த வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, அனாஹத், செந்தில் வேலவன், அபய் சிங் ஆகியோர் விளையாடினர். நேற்று நடைபெற்ற அரையறுதி போட்டியில் இந்தியா - எகிப்த் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஹாங்காங் - ஜப்பான் அணிகள் மோதின. இதில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் முடித்தனர். பின்னர், செட் கணக்கின் அடிப்படையில் ஹாங்காங் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதின. இதில் 3-1, 3-0, 3-0 என்ற செட் கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


