Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக தமிழ் வளர்ச்சி மாநாட்டில் பெறப்படும் ஆலோசனைகளை பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை; உலக தமிழ் வளர்ச்சி மாநாட்டில் பெறப்படும் ஆலோசனைகளை பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் உலக தமிழ் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கலைஞர் தமிழுக்கு செய்தது ஏராளம். தமிழ் வழியில் படித்தால் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கட்டணத்தில் விலக்கு, குறிப்பிட்ட அரசுப் பணிகளில் சேர தமிழ் வழியில் படித்தால் முன்னுரிமை, கல்வி நிறுவனங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடல்களை பாட வேண்டும். மாநிலத்தின் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தவர் நம் முதல்வர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்தி இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 1500 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். தமிழில் உள்ள பெருமைகளை உலகம் முழுதும் கொண்டு செல்ல பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தி பல மொழிகளில், பல நாடுகள் மொழி பெயர்ப்பு செய்ய ஒப்புதல் அளித்து தமிழின் பெருமையை கொண்டு சேர்க்க செயல்பட்டு வருகிறோம். தமிழ் மொழிப் பெயர்ப்பு செய்ய 3 கோடி வரை ஒதுக்கி உள்ளார் முதலமைச்சர். 45 நாடுகளை சார்ந்தவர்களை அழைத்து புத்தக திருவிழாவை நடத்துகிறோம்.

750 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாவை கொண்டு சென்றுள்ளோம். மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்தியுள்ளோம். தனியார் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று அதை சாத்தியப் படுத்தி உள்ளோம். 25 ஆயிரம் தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கு புத்தாக பயிற்சி வழங்கியுள்ளோம். 1918 இல் தான் தமிழ் மொழிக்கு செம்மொழி என்று வர வேண்டும் என்று சொன்ன போது கலைஞர் தான் அந்த அந்தஸ்த்தை பெற்று தந்தார். இந்த மொழி மாநாட்டில் பெறப்படும் ஆலோசனைகளை பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.” என்று தெரிவித்தார்.