சென்னை: உலகக்கோப்பை ஸ்குவாஷ் இறுதி போட்டியில், ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. 5வது உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் எகிப்தை சந்தித்தது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று எகிப்துக்கு அதிர்ச்சி அளித்து, இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் ஹாங்காங் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா-ஹாங்காங் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
இந்தியா சார்பில் ஜோஸ்னா சின்னப்பா 7-3,2-7,7-5,7-1 என்ற செட் கணக்கில் ஹாங்காஙை சேர்ந்த கா யி லீயை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் அபய் சிங் 7-1,7-4,7-4 என்ற நேர் செட் கணக்கில், குவான் லாவை வீழ்த்தினார். 3வது போட்டியில் அனாஹத் சிங் 7-2, 7-2, 7-5 என்ற கணக்கில் ஹோ தக்காளியை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்று முதல்முறையாக உலகக்கோப்பை ஸ்குவாஷ் பட்டத்தை தட்டி சென்றது.


