Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேலைப்பளுவால் சாப்பிட மறப்பவர்களுக்கு பசி எடுத்தால் வீடு தேடிவரும் சுவையான உணவு: இளைஞர் கண்டறிந்த ‘ஏஐ’ கருவியின் விநோதம்

மங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சோஹன் எம் ராய் என்பவர் ஸ்டார்ட்-அப் நிறுவனராகவும், சமூக வலைதளங்களில் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களைப் பகிர்பவராகவும் உள்ளார். இவர் பெரும்பாலும் தனது அலுவலக வேலைகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவதால், பல நேரங்களில் நேரத்திற்குச் சாப்பிட மறந்துவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதனால் உரிய நேரத்தில் பசி எடுக்காமல் இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி ‘மாம்’ (MOM) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதுமையான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார். இது பசி எடுக்கும்போது மனிதர்களின் உதவியின்றியே தானாகவே உணவை ஆர்டர் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனம் செயல்படும் விதம் குறித்து சோஹன் எம் ராய் கூறுகையில், ‘முப்பரிமாண அச்சு (3டி பிரிண்டிங்) தொழில்நுட்பத்தில் உருவான சிறிய பெட்டியில் ஒலிவாங்கி மற்றும் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ஸ்டெதஸ்கோப் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதனை வயிற்றில் பொருத்திக்கொண்டால், பசி எடுக்கும்போது வயிறு எழுப்பும் சத்தத்தை இது துல்லியமாகக் கண்டறியும். பின்னர் இணையதளம் மூலம் கணினியில் உள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்குத் தகவல் அனுப்பப்படும். அந்த மென்பொருள் சத்தத்தை ஆய்வு செய்து, அது பசி சத்தம்தானா? என்பதை உறுதிப்படுத்தும்.

பசி உறுதி செய்யப்பட்டால், உடனடியாக உணவு விநியோகம் செய்யும் செயலி மூலம் உணவு ஆர்டர் செய்யப்படும். பசியின் சத்தம் குறைவாக இருந்தால் சிற்றுண்டியும், அதிகமாக இருந்தால் பிரியாணி போன்ற முழு உணவும் ஆர்டர் செய்யும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று விளக்கினார். இதற்காக அவர் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து, தனது வயிற்று சத்தத்தை பதிவு செய்து இந்தக் கருவிக்குப் பயிற்சி அளித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.