சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கான அறிவிப்பு 16.10.2025 அன்று வாரியத்தால் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 17.10.2025 முதல் 10.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஏற்கனவே பணி நாடுநர்களின் பணி அனுபவச் சான்றிதழ்களை மட்டும் 30.11.2025 வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது பணிநாடுநர்கள் தங்களின் பணி அனுபவச் சான்றிதழ்களில் உரிய அலுவலர்களிடம் மேலொப்பம் பெற்று பதிவேற்றம் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை வாரியத்தால் பரிசீலிக்கப்பட்டு, பணி அனுபவச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டிசம்பர் 5ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


