மகளிர் உரிமை தொகை திட்டம்; இந்தியாவுக்கே தமிழ்நாடு எடுத்துக்காட்டாக உள்ளது: ஆவடியில் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு
ஆவடி: ஆவடி, இந்து கல்லூரி கூட்டரங்கில் நேற்று காணொளி காட்சி வாயிலாக, 2ம் கட்ட மகளிர் உரிமை தொகைக்கான வங்கி அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 1482 பெண்களுக்கு மகளிர் உரிமை தொகைக்கான வங்கி அட்டைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், தேர்தல் அறிக்கையின்படி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தகுதி அடிப்படையில் 1.13 கோடி மகளிர்களுக்கு ரூ.30,838 கோடி வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 3,49,499 பயனாளிகள் மகளிர் உரிமை தொகை பெற்றுள்ளனர். தற்போது 2வது கட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 389 முகாம்களில் 4 கட்டமாக பெறப்பட்ட மனுக்களில், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் சீரிய முயற்சியால், சிறப்பு திட்ட செயலாக்க துறை சார்பில் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்களும் பின்பற்றி வளர்ந்து கொண்டிருக்கின்றன. இதன்மூலம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இந்த அரசு உள்ளது’ என்றார். நிகழ்ச்சியில், கலெக்டர் மு.பிரதாப், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், துரை சந்திரசேகர், ஆவடி மேயர் கு.உதயகுமார், ஆணையர் ரா.சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தனி துணை ஆட்சியர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


