மதுரை: மதுரை மாநகரில் முக்கிய பகுதியாக விளக்குத் தூண் பகுதி உள்ளது. இங்கு ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த செல்வமாலினி(46) என்பவர் ஜவுளி எடுப்பதற்காக வந்த மகளை அழைத்துச் செல்வதற்காக தளவாய் தெரு சந்திப்பில் காத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் சாக்குப்பை ஒன்று கிடந்தது. அதை செல்வமாலினி எடுத்து பார்த்தார்.
அந்த பையில் ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது. அந்த பையை எடுத்துக்கொண்டு விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணனிடம் ஒப்படைத்தார். சாக்குப்பையில் இருந்த பணக்கட்டுகளை போலீசார் எண்ணிப்பார்த்தபோது ரூ.17.50 லட்சம் இருந்தது. நேர்மையான முறையில் பணத்தை ஒப்படைத்த செல்வமாலினியை போலீசார் வெகுவாக பாராட்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி செல்வமாலினிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பணத்தை தவறவிட்டுச் சென்றவரை கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
