லண்டன்: விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் நேற்று, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, ஜெர்மன் வீராங்கனை லாரா சீக்மண்டை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார். விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில், பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா (27), ஜெர்மன் வீராங்கனை லாரா சீக்மண்ட் (37) உடன் மோதினார். முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் லாரா கைப்பற்றினார். அதற்கு பதிலடியாக 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் சபலென்கா வசப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து நடந்த 3வது செட்டில் சுதாரித்து ஆடிய சபலென்கா, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடினார். அதன் மூலம் போட்டியில் வென்று அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். விம்பிள்டன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில், அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ், ரஷ்ய வீரர் கரென் காஷனோவ் மோதினர். முதல் இரு செட்களை எளிதில் வென்ற டெய்லர் ஃபிரிட்ஸ், 3வது செட்டை மோசமாக ஆடி இழந்தார். அதைத் தொடர்ந்து நடந்த 4வது செட் போட்டி கடும் இழுபறியாக காணப்பட்டது. டைபிரேக்கர் வரை சென்ற அந்த செட் கடைசியில் டெய்லர் வசம் வந்தது. அதனால், 6-3, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்ற டெய்லர் ஃபிரிட்ஸ், அரை இறுதிக்கு முன்னேறினார்.