Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காட்டுப் பன்றிகள் பிரச்சனைக்கு தீர்வு எப்போது?

*விவசாயிகள் கொந்தளிப்பு

கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் பவன்குமார் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விவசாயிகள் கூறியதாவது: திருமூர்த்தி அணை பாசன பகுதி கால்வாய்களை தூர்வாரி, கீழ் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.

விவசாய நிலங்களில் சேதங்களை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட அரசு ஆணையிட்டு பல மாதங்களாகியும், வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காட்டுப் பன்றிகளால் பயிர் சேதங்கள் அதிகரித்து வருகிறது.வனப்பகுதியில் இருந்து பல கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகளில்கூட இரவு நேரத்தில் மட்டுமின்றி, பகல் நேரங்களில்கூட காட்டு பன்றிகள் வருகின்றன.

ஆனால் வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை சுட நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதேபோல வனப்பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவிற்குள் உள்ள பகுதிகளில் காட்டுப் பன்றிகளை பிடிக்க கூண்டுகளை அதிகளவில் வைக்க வேண்டும். பிடிக்கப்படும் காட்டுப்பன்றிகளை புலிகள் காப்பக பகுதியில் விட வேண்டும். பயிர் சேதம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கான தேதியை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.

உணவுக்காக யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில், வனப்பகுதியில் விதைப்பந்துகளை போட்டு மரங்களை அதிகரிக்க வேண்டும். மனித - வனவிலங்கு மோதல்களை குறைக்க வேண்டும். யற்கை சீற்றம் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்‌சேதங்களுக்கு மிக குறைந்த தொகையே இழப்பீடாக வழங்கப்படுகிறது. இதனை அதிகரித்து வழங்க வேண்டும்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரேசன் கடைகளில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் மற்றும் கடலெண்ணெய் தர வேண்டும். சிபில் ஸ்கோர் பார்த்து கூட்டுறவு கடன் வழங்குவதை கைவிட வேண்டும். சிறுவாணி அணையை தூர்வார வேண்டும்.‌நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

காட்டுப்பன்றி பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு வனத்துறையினர் உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறி, விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குறுக்கிட்ட மாவட்ட கலெக்டர் பவன்குமார், அடுத்த மாதம் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தின்போது, காட்டுப்பன்றி பிரச்சனைகள் தொடர்பாக வனத்துறையினர் எடுத்த நடவடிக்கைகளின் விபரங்களை அளிக்க வேண்டுமென வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல விவசாயிகள் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் பவன்குமார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.