Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று குளத்தில் வீசிய மனைவி: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ரியல் எஸ்டேட் அதிபரை கொன்று குளத்தில் வீசியதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் ஜோடியை தேடிவருகின்றனர்.ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் பொதுகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதா (40), ரியல் எஸ்டேட் அதிபர்.

இவரது மனைவி யமுனா (32). தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மஞ்சுநாதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அருகில் உள்ள பெனுகொண்டா பகுதிக்கு குடும்பத்துடன் குடியேறினார். யமுனாவுக்கும், ரோட்டம் பகுதியை சேர்ந்த சித்து (35) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த மஞ்சுநாதா, மனைவியை கண்டித்துள்ளார்.

தொடர்ந்து தடை விதித்ததால் கடந்த ஆண்டு தனது கள்ளக்காதலன் சித்துவிடம், யமுனா கூறினார். கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள மஞ்சுநாதாவை கொலை செய்ய கள்ளக்காதல் ஜோடி திட்டமிட்டது. அதன்படி தனது நண்பர்களான நூர்முகமது (28), மதன்மோகன் (30), பிட்டி (32) ஆகியோருடன் சேர்ந்து சித்து திட்டமிட்டார்.

கடந்த 22-4-2024 தனது தொழிலில் நல்ல லாபம் வந்ததாகவும், மதுபார்ட்டி வைப்பதாகவும் கூறி மஞ்சுநாதாவை, சித்து அழைத்தார்.  அதன்படி சென்ற மஞ்சுநாதாவுக்கு அதிக மது கொடுத்துள்ளார். மதுபோதையில் இருந்த அவரை சித்து மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

இதனை அதே இடத்தில் மனைவி யமுனா மறைந்திருந்து பார்த்துள்ளார். பின்னர் சடலத்தை அங்குள்ள குளத்தில் வீசியுள்ளனர்.இதையடுத்து தனது கணவரை காணவில்லை என்று மாமியார் குடும்பத்தினருக்கு போன் செய்து யமுனா கூறியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து தேடுவது போல் நாடகமாடியுள்ளார். இந்நிலையில் அங்குள்ள குளத்தில் மஞ்சுநாதாவின் சடலம் மிதந்தது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். பிரேத பரிசோதனை முடித்து சடலத்தை ஒப்படைத்தனர். போலீசாரிடமும் யமுனா, தொடர்ந்து நாடகமாடி சமாளித்தார்.

இதையடுத்து சடலம் அடக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர் தனது மகன் மற்றும் மகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவிட்டு யமுனா மாயமானார். இச்சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் மஞ்சுநாதாவின் பெற்றோருக்கு மாயமான யமுனா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த வாரம் தர்மாவரம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார், சடலத்தை தோண்டியெடுத்து மறு பிரேத பரிசோதனை செய்தனர். அதில், மஞ்சுநாதா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டது தெரிந்தது. அதற்கேற்ப யமுனா மற்றும் சித்து ஆகியோர் தலைமறைவானதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சித்துவின் நண்பர்களான நூர்முகமது, மதன்மோகன், பிட்டி ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியை தேடிவருகின்றனர்.