திருமண விழாவில் மணமக்களுக்கு வாழ்த்து பிறக்கப்போகும் குழந்தைக்கு தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதியின் இல்ல திருமண விழா சேந்தமங்கலம் பகுதியில் நடந்தது. அப்போது, பிறக்கப்போகும் குழந்தைக்கு மணமக்கள் தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே சேந்தமங்கலம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதியின் இல்ல திருமண விழா நேற்று காலை நடந்தது. விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அப்போது, அவர் பேசுகையில்; தம்பதியினருக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்ல தமிழ் பெயரை சூட்ட வேண்டும். மேலும், கலைஞரும் தமிழும் போல, தலைவரும் உழைப்பும் போல, இயக்கமும் இயக்க தொண்டர்களை போல ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினார். நிகழ்ச்சியில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.