Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பலவீனமான கூட்டணியே அதிமுக தோல்விக்கு காரணம் 2026 தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை: தொகுதிவாரியான ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சென்னை: தேர்தல்களில் தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வரும் நிலையில், தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் முக்கிய கட்சியான அதிமுக, ஜெயலலிதா மறைவுக்கு பின்பு மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக அதிமுகவினரே கூறி வருகின்றனர். அதிமுகவில் உட்கட்சி மோதல் உருவாகி டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என பலரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் உச்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை பெற்று அக்கட்சியை வழிநடத்தி வருகிறார். ஆனால் அவரது தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுக படுதோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிமுகவின் அலட்சியத்தை பாஜ பயன்படுத்தி கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன.இதனால் அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அதிருப்திகளையும், ஆதங்கங்களையும் வீடியோ மூலம் வெளிப்படுத்தும் வரை நிலைமை சென்றது. இந்த சூழ்நிலையில், மற்றொரு தோல்வியை தவிர்க்க வேண்டும் என்பதற்காக விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அதிமுகவைப் பழைய நிலைக்குக் கொண்டு வரப் போவதாக சசிகலா கூறியுள்ளார்.

பிளவு ஏற்பட்டுள்ள கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அதிமுக ஒன்றிணைவை வலியுறுத்தி குரல்கள் வலுவடைந்துள்ளன. அதேநேரம் பிளவுபட்ட அதிமுகவை ஒன்றிணைய செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களை எதிர் எதிர் துருவங்களாக இருப்பதாகவும், உட்கட்சி பூசல் வலுத்து வருவதாகவும் அதிமுக தலைமைக்கு புகார்கள் குவிந்து வருவதால் அவற்றை களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி குறித்தும், தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் தொகுதிவாரியாக ஆராய்வதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார்.

அதன்படி, நேற்று முதல் வரும் 19ம் தேதி வரை என மொத்தம் 10 நாட்கள் இந்த ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறுகிறது. முதல்கட்டமாக நேற்று மாலை 3.30 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதி நிர்வாகிகளுடனும், மாலை 5.50 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒவ்வொரு தொகுதியில் உள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்விக்கான காரணங்களை தெரிவிக்குமாறு கூறினார். அப்போது மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சரமாரியாக அடுக்கியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில், தேர்தல் பணிகளில் நடந்த உள்ளடி வேலைகள், சரியாக தேர்தல் பணிகளில் ஈடுபடாதவர்கள், பணத்தை முறையாக செலவழிக்காதவர்கள் குறித்த தகவல்களை நிர்வாகிகள் பட்டியலிட்டு பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சிலர் தேர்தல் தோல்விக்கு காரணம், அதிமுக பிளவுபட்டது தான், அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. நிர்வாகிகளின் கருத்துகளை எல்லாம் கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்தியில் சில அறிவுரைகளை வழங்கி பேசியுள்ளார். கடந்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவினாலும், நாம் மீண்டும் எழுந்து ஆட்சியை பிடிக்க வேண்டும். அதற்காக கட்சியினர் அனைவரும் கடுமையாக தங்கள் உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்விக்கு, பலவீனமான கூட்டணியே அதிமுக தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. இனி வரும் தேர்தல்களில் கூட்டணியை பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன்.

வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலே நமது இலக்கு. பலம் வாய்ந்த கூட்டணியை நாம் அமைப்போம் என்பதை உறுதியோடு சொல்கிறேன். துரோகிகள் அதிகமாக உள்ளனர். அவர்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணையும் வாய்ப்பே இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். எனவே சட்டமன்ற தேர்தலை நோக்கி தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் மத்தியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடிய நிர்வாகிகள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.