Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இதுவரை செல்ல முடியாத அபாயகரமான வயநாடு சன் ரைஸ் பள்ளத்தாக்கில் மீட்பு படையினர் பரிசோதனை: நிலச்சரிவு பலி எண்ணிக்கை 410ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்து உள்ளது. ேநற்று 8வது நாளாக உடல்களைத் தேடும் பணி நடந்தது. இதுவரை செல்ல முடியாத அபாயகரமான சூஜிப்பாறை சன்ரைஸ் பள்ளத்தாக்கில் நேற்று ராணுவம், வனத்துறை உள்பட மீட்புப் படையினர் ஹெலிகாப்டரில் சென்று உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு நேற்றுடன் 8 நாள் ஆனது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெயில், மழை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பெரும் சிரமங்களுக்கு இடையே இந்தப் பகுதிகளில் தினமும் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. இதுவரை கிடைத்த உடல்களின் எண்ணிக்கை 410ஐ தாண்டி விட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களது உடல்களைத் தேடும் பணி நேற்று காலை மீண்டும் தொடங்கியது. நிலச்சரிவின் தொடக்கப் பகுதியான புஞ்சிரிமட்டம் மலைப்பகுதியில் இருந்து உருவாகும் ஆறு சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை பகுதிகளைத் தாண்டி சாலியார் ஆற்றில் கலக்கிறது. இந்த ஆறு செல்லும் வழியில் சூஜிப்பாறை என்ற இடத்தில் 3 அருவிகள் உள்ளன. இந்தப் பகுதியில் சன் ரைஸ் பள்ளத்தாக்கு உள்ளது. இது மிகவும் ஆபத்தான பகுதியாகும். அங்கு எளிதில் செல்ல முடியாது.

இந்த இடத்தில் உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் அந்தப் பகுதியில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அங்கு நடந்து செல்ல முடியாது என்பதால் விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் ராணுவம், வனத்துறை மற்றும் கேரள போலீசின் கமாண்டோ வீரர்கள் உட்பட 12 பேர் அந்த பகுதிக்கு சென்றனர்.அருவி மற்றும் ஒட்டியுள்ள வன பகுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால் மாலை வரை உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அனைவரும் திரும்பினர்.இதற்கிடையே முன்றாவது நாளாக நேற்று 22 உடல் பாகங்கள் சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முதல் நாள் 8 உடல்ககளும் 2 வது நாளான நேற்று முன்தினம் 30 உடல்களும் 158 உடல் பாகங்களும் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.