வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜிப்லைன் மூலம் ஆற்றை கடந்து சிகிச்சை அளித்த நர்சுக்கு பாராட்டு: அமைச்சர்கள் நேரில் கவுரவிப்பு
ஊட்டி: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது ஜிப் லைன் மூலம் ஆற்றைக்கடந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் சபீனாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர். முண்டக்கை-சூரல்மலையை இணைக்கும் பாலம் உடைந்ததால், அங்கு சிக்கியவர்களுக்கு ஜிப்லைன் மூலம் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த சபீனா என்ற நர்ஸ் தானாக முன் வந்து ஜிப் லைன் மூலம் மறு கரைக்கு சென்று அங்கு 35 பேருக்கு சிகிச்சை அளித்தார்.
அவரது செயல் பெரும் பாராட்டை பெற்றது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சபீனாவிற்கு தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா ஊட்டியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, சபீனாவை பாராட்டி, அவருக்கு தமிழக அரசு சார்பில் நினைவு பரிசை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
* மலை பகுதிகளுக்கு விரைவில் பைக் ஆம்புலன்ஸ் சேவை
அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில்,``சபீனாவுக்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேறு வகையில் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் சாலை வசதி இல்லாத உயரமான இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அவசர சிகிச்சைக்காக 25 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது’ என்றார்.