Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வயநாட்டில் நிலச்சரிவால் பேரழிவு; கர்நாடகா அரசு சார்பில் 100 வீடு கட்டித்தரப்படும்: முதல்வர் சித்தராமையா உறுதி

பெங்களூரு: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்துவரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் பல நூறு வீடுகள் இடிந்தன. பலி எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை 400ஐ நெருங்கிவிட்ட நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. கேரள மாநிலத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், சாமானியர்கள் என தனிநபர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடக மாநில அரசுகளும் தேவையான ஆதரவுகளை அனைத்துவகையிலும் அளித்துவருகின்றன.

இந்நிலையில், வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சித்தராமையா, ``கர்நாடக அரசின் ஆதரவு இருக்கிறது என்பதை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு உறுதியளிக்கிறேன். கர்நாடக மாநில அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும். அனைவரும் இணைந்து மறுகட்டமைப்பு செய்து மீளச்செய்வோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் நன்றி: சித்தராமையாவின் அறிவிப்புக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, ‘கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பல பேர் வீடுகளை இழந்த நிலையில், 100 வீடுகள் கட்டித்தருவதற்கான உங்கள் அர்ப்பணிப்பு, மறுவாழ்வு முயற்சிகளில் குறிப்பிடத்தக்கதாகும். இந்தியர்களின் கருணையும் ஒற்றுமையும் தான் வயநாட்டுக்கு இப்போது தேவைப்படும் பலமாகும்’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தியும் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில மக்களின் மனிதநேயத்துக்கும் இரக்கவுணர்வுக்கும் நன்றி என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.