Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வயநாடு தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டம் பாஜவுக்கு அரசியல் மரியாதை தெரியாது: பிரியங்கா காந்தி எம்பி பேச்சு

திருவனந்தபுரம்: பாஜவுக்கு அரசியல் மரியாதை தெரியாது என்று வயநாடு தொகுதியில் நேற்று நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பிரியங்கா காந்தி எம்பி பேசினார். வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் எம்பியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று பிரியங்கா காந்தி வந்தார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வந்திருந்தார்.

மலப்புரம் மாவட்டத்திலுள்ள முக்கம் பகுதியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியது: நீங்கள் எனக்கு அளித்த அன்பிற்கு நான் என்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வயநாடு மக்களுக்கான என்னுடைய போராட்டம் தொடங்கிவிட்டது. உங்களுக்கு என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பது குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். அவை அனைத்தையும் தீர்த்து வைப்பது தான் என்னுடைய முதல் கடமையாகும்.

பாஜவுக்கு எந்த அரசியல் மரியாதையும் தெரியாது. நாட்டில் தேர்தல் நடைமுறைகள் குறித்த நம்பிக்கை போய்விட்டது. நாட்டை நிலை நிறுத்தும் அடிப்படை அம்சங்களுக்காக நாம் போராட வேண்டும். வயநாடு தொகுதி மக்களுக்காகத் தான் நான் நாடாளுமன்றத்தில் உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். இதன் பின்னர் ராகுல் காந்தி பேசியது: நாம் அனைவரும் அன்பைக் குறித்து பேசும்போது பாஜ வெறுப்பு அரசியல் குறித்து பேசுகிறது. வயநாட்டில் பேரழிவு ஏற்பட்ட போதிலும் மக்களுக்கு எந்த உதவியும் செய்ய மோடி தயாராக இல்லை. இந்திய அரசியலமைப்பை காப்பாற்றுவதற்காகத் தான் நாம் போராடுகிறோம்.

எல்லா இந்தியர்களும் சமம் என்றுதான் அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால் அதானிக்கு மட்டும் தான் சிறப்பு உரிமை என்று மோடி கூறுகிறார். சிபிஐ உள்பட எல்லா விசாரணை அமைப்புகளும் அவர்களது கைகளில் உள்ளது. ஆனால் எங்களது கைகளில் மக்களின் இதயங்கள் உள்ளன. பாஜவின் கொள்கைகளை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மலப்புரம் மாவட்டத்தில் 2 இடங்களில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டங்களில் இருவரும் கலந்து கொண்டு பேசினர். அதன் பின்னர் ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டு சென்றார். பிரியங்கா காந்தி இன்றும் வயநாடு தொகுதியில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.