Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வயநாட்டில் 13வது நாளாக மீட்புபணி உடல் பாகங்கள் தொடர்ந்து மீட்பு

திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது. 13வது நாளாக நேற்று நடந்த தேடுதல் வேட்டையில் 3 உடல் பாகங்கள் கிடைத்தன. வயநாட்டில் உள்ள சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு நேற்றுடன் 13 நாள் ஆனது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 126 பேரை காணவில்லை.

13வது நாளான நேற்று சூரல்மலை, முண்டக்கை உள்பட பகுதிகளில் உடல்களைத் தேடும் பணி நடைபெற்றது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் உள்பட 2000க்கும் மேற்பட்டோர் 6 குழுக்களாக உடல்களைத் தேடினர். இதில் பரப்பன்பாறை என்ற இடத்தில் 3 உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் மேப்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டன.

நேற்று உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பரப்பன்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் தேடுதல் வேட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது.

கதறி அழுத அமைச்சர்

நேற்று சூரல்மலை பகுதியில் கேரள வனத்துறை அமைச்சரான சசீந்திரனும் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது நிலச்சரிவில் தந்தை மற்றும் உறவினர்களை இழந்த முகம்மது இஷாக் என்ற 17 வயது சிறுவனை அவர் சந்தித்தார்.

நிலச்சரிவில் தந்தை உள்பட உறவினர் அனைவரையும் இழந்த அந்த சிறுவனின் சோகக் கதையை கேட்டு அமைச்சர் கதறி அழுதார். வாழ்நாளில் தனக்கு இப்படி ஒரு மோசமான நிலைமையை சந்திக்க வேண்டிவரும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று அவர் அழுதபடியே கூறினார்.