தொண்டாமுத்தூர்: கோவை சிறுவாணி வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை வெளியேறிய 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, 2 பெண் யானைகளுடன் காருண்யா நகர் அருகே விவசாய நிலத்தில் மேய்ந்தது. தகவலறிந்து வந்த வன ஊழியர்கள் யானையை அங்கிருந்து வனத்துக்குள் விரட்டினர். ஆனால், யானைகள் காருண்யாநகர் சப்பாணி மடை சோளப்படுகை என்ற இடத்திற்கு வந்தன.
அங்கு கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த நிர்மலா தேவி (55) என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், 25 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் தலைகுப்புற விழுந்து, 5 அடி உயரத்துக்கு தேங்கிய சேற்றில் தலை சிக்கிமூச்சுத்திணறி உயிரிழந்தது. தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறையினர் 2 பொக்லைன், ஒரு கிரேனுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். நேற்று காலை 7.10க்கு மீட்பு பணியை தொடங்கினர்.
சுமார் 3 மணி நேரம் போராடி தொட்டியில் இறந்து கிடந்த யானையை ரோப் கயிறு கட்டி மீட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், திறந்த படி உள்ள கிணறுகள், இதுபோன்ற தொட்டிகளை மூட வேண்டும். அலட்சியமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.