Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்போக சாகுபடிக்காக பெரியாறு அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல்போக சாகுபடிக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியாக உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என, மாவட்டத்தில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலங்களுக்கு, ஆண்டுதோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், முதல் போகத்திற்கு ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் தாமதமானது. கடந்த ஆண்டு மழை குறைந்ததால், அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக இருந்தது. இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்போக விவசாயத்திற்கு ஜூன் முதல்நாள் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனால் இப்பகுதிகளில் இருபோகம் விளைந்து தற்போது மீண்டும் முதல்போக விவசாயத்திற்காக விவசாயிகள் நிலங்களை தயார்படுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாக பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, அணையின் நீர்மட்டம் நேற்று 119.10 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தேனி மாவட்ட முதல்போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தேனி கலெக்டர் ஷஜீவனா இன்று (ஜூன் 1) பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி, தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.

* 4ம் ஆண்டாக தொடர்கிறது

கடந்த 2011ல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.80 அடியாக இருந்தபோது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன் 14ல் தண்ணீர் திறக்கப்பட்டது. 2012ல் நீர்மட்டம் 112 அடியாக இருந்தபோது ஜூன் 25, 2013ல் நீர்மட்டம் 113.70 அடியான நிலையில் ஜூன் 28, 2014ல் ஜூன் 1ல் நீர்மட்டம் 113.80 அடி, 2015ம் ஆண்டு ஜூன் 2ல் நீர்மட்டம் 117 அடியாக இருந்தபோது தண்ணீர் திறக்கப்பட்டது.

2016ம் ஆண்டு ஜூலை 14ல் நீர்மட்டம் 118.70 அடியாக இருந்த நிலையிலும், 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ல் நீர்மட்டம் 127 அடியாக இருந்தபோதும், 2018ம் ஆண்டில் 127.20 அடியாக இருந்தபோது ஜூலை 14ம் தேதியும், 2019ல் நீர்மட்டம் 131 அடியாக இருந்தபோது ஆகஸ்ட் 29ம் தேதியும், 2020ல் நீர்மட்டம் 137 அடியானபோது ஆகஸ்ட் 14ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின்பு 2021ல் அணையின் நீர்மட்டம் 130.90 அடியாக இருந்தது. இதையடுத்து ஜூன் 1ம் தேதியும், 2022ல் நீர்மட்டம் 130.90 அடியாக இருந்தபோது ஜூன் 1ம் தேதியும், கடந்த ஆண்டு 118.40 அடியாக இருந்தபோது ஜூன் 1ம் தேதியும், பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு தொடர்ந்து 4வது ஆண்டாக பெரியாறு அணை ஜூன் 1ம் தேதி திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.