Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை; பெரியாறு அணைக்கு நீர்வரத்து கிடுகிடு: ஜூன் முதல் வாரத்தில் முதல் போக தண்ணீர் திறப்பு

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையொட்டி ஜூன் முதல் வாரம் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கும். ஆனால், இந்தாண்டு முன்னதாகவே தொடங்கிவிட்டது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 23ம் தேதி அணைக்கு நீர்வரத்து 100 கனஅடியாக இருந்தது.

தற்போது மழையால் நேற்று 583 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை கிடுகிடுவென உயர்ந்து 1844 கனஅடியாக உயர்ந்தது. இதனால், 152 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டமும் உயர்ந்து இன்று காலை 115.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 1844 கனஅடி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் நீர்வரத்தும், நீர்மட்டமும் உயரும் என 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 52.81 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 34 கனஅடி. நீர் திறப்பு 72 கனஅடி. நீர் இருப்பு 2382 மில்லியன் கன அடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.50 அடி. அணைக்கு நீர்வரத்து 15 கனஅடி. நீர் வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 178.35 மில்லியன் கனஅடி.

126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.96 அடி. நீர்வரத்து 17 கனஅடி. நீர் திறப்பு 3 கனஅடி. நீர்இருப்பு 53.61 மில்லியன் கன அடி. 52.55 அடி உயரமுள்ள சண்முகநதி அணையின் நீர்மட்டம் 43.20 அடி. நீர்வரத்து 3 கனஅடி. நீர் வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 51.97 மில்லியன் கனஅடி.

ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பு:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரம் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக (14,707 ஏக்கர்) சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையில் தற்போது 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் 113 அடியாக குறைந்தது. இதனால், தமிழகத்திற்கு குடிநீருக்கு மட்டும் இரைச்சல் பாலம் வழியாக 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதையடுத்து லோயர்கேம்பில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கம்போல, கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்கப்படும். இதேபோல, இந்தாண்டும் ஜூன் முதல் வாரத்தில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேக்கடி தமிழக பொதுப்பணித்துறையினர் குடியிருப்பு அருகே உள்ள ஷட்டர்ஸ் மூலம் ராட்சத குழாய்கள் வழியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து லோயர்கேம்பிலும் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கும். இதனிடையே, மின்உற்பத்தி நிலையத்தில் உள்ள இயந்திரங்கள், உபகரணங்கள் சீரமைப்பு பணி நடைபெறும்.