*பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை
சிதம்பரம் : சிதம்பரம் அருகே சிவாயம் பகுதியில் இருந்து ஓலையூர் வடிகால் ஓடை வருகிறது. இது கண்டியமேடு வழியாக வந்து பழைய கொள்ளிடம் ஆற்றில் சேர்கிறது. இந்த ஓடையில் மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் செல்லும். இப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் இந்த ஓடை பகுதியில் வரும் தண்ணீரை பாசனத்துக்கும், வடிகாலாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சம்பா நெல் நடவு சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது இவை செழித்து வளர்ந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் இந்த ஓலையூர் ஓடையில் கண்டியாமேடு பாலம் உள்ள பகுதியில் இருந்து செல்லும் பகுதியில் அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து ஓடை முழுவதையும் ஆக்கிரமித்து காணப்படுகின்றன. அதேபோல் ஓடையின் கரை மற்றும் நடுப்பகுதிகளில் முட்செடிகளும், புதர்களும் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும் கருவேல மரங்களும் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் தேங்கி நிற்கிறது.
கடந்த வாரத்தில் இப்பகுதியில் பெய்த கனமழையால் இந்த ஓடையில் அதிகளவு தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ளது. ஆகையால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஓடையில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளையும், முட்புதர்களையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தெரிவித்ததாவது, ஓலையூர் ஓடையில் கடந்த ஆண்டு தூர்வாரி புனரமைக்கப்பட்டது.
இந்த ஆண்டு இன்னும் தூர்வாரவில்லை. அதற்கான பணிகள் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. வருடந்தோறும் இந்த ஓடையை தூர்வாரி வடிகாலை சீரமைத்து, இந்த ஓடையின் மூலம் வரும் தண்ணீரை பழைய கொள்ளிடம் ஆற்றில் சென்று சேர்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.


