*குப்பை மேடாகி வரும் காவிரி கரை
*சீர்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை
தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் மலை போல் குவிந்து கிடக்கும் பழைய துணிகள் உள்ளிட்ட குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அவற்றை அப்புறப்படுத்தி ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிந்து காவிரி ஆற்று படுகை முழுவதும் உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய துணிகள் மற்றும் பிற பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒகேனக்கல்லில் ஒவ்வொரு 15 அடிக்கும் ஒரு குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை முறையாக பயன்படுத்துவதில்லை. உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன.
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், உணவு கழிவு பொருட்கள், ஷாம்பு, சோப்பு கவர்களை ஆற்றில் போடுவதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒகேனக்கல் ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணியில் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஒகேனக்கல் சுற்றுலா தலமாக மட்டுமின்றி, இறுதிச் சடங்குகளைச் செய்யவும், பிற மத விழாக்களில் பங்கேற்கும் இடமாகவும் உள்ளது. காவிரி ஆற்றில் நீராடுபவர்கள், தாங்கள் உடுத்திருக்கும் ஆடைகளை அப்படியே ஆற்றில் விட்டு வருவது வழக்கமாக உள்ளது.
மேலும், சுற்றுலா வருவோரும் ஆற்றில் குளித்து விட்டு, தாங்கள் கொண்டு வந்த பழைய துணிகளை, அப்படியே கரையில் போட்டு விட்டு செல்கின்றனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, இந்த துணிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு அடித்துச் செல்லப்படுகிறது. நீர்வரத்து குறையும் போது, ஆங்காங்கே தேங்குகின்றன. இதனால், ஒகேனக்கல்லில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விசுவ இந்து பரிஷத் சேலம் மண்டல செயலாளர் மாது, தர்மபுரி மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் சார்பில், மாவட்ட கலெக்டர் சதீஸிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
அதேபோல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஈமச்சடங்கு போன்ற காரியங்கள் செய்வதற்காகவும் ஒகேனக்கலுக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் வீசி செல்லும் காலி குளிர்பான பாட்டில்கள், உணவு கழிவுகள் மற்றும் சோப்பு, ஷாம்பு பாக்கெட்டுகள் குவிந்து கிடக்கிறது. சடங்குகள் செய்வதற்காக வரும் மக்கள், விட்டுச் செல்லும் துணிகள், காலணிகள் உள்ளிட்ட கழிவுகளால் காவிரி கரையோர பகுதி குப்பை மேடாகி வருகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு போதுமான கழிவறை வசதிகள் இல்லை. ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறையும் சுகாதாரமாக பராமரிக்கப்படாததால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடத்தை பராமரிப்பதற்கு, மிக குறைவான தூய்மை பணியாளர்களையே கூத்தப்பாடி ஊராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது.
மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை. எனவே, ஒகேனக்கல்லில் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், கழிவறைகளை கூடுதலாக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்வதை தடை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குப்பை கொட்டப்படுகிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.


