வாஷிங்டன்: வாஷிங்டன் ஓபன் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வீராங்கனை ஜெஸிகா பெகுலா அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். அமெரிக்காவில் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதிலொரு ஆட்டத்தில், போட்டியின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா (31 வயது, 4வது ரேங்க்), கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் (22வயது, 36வது ரேங்க்) மோதினர். 2 மணி 20 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் பெகுலா 3-6, 6-1, 5-7 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். லெய்லா காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜெஸிகா, சமீபத்தில் நடந்த விம்பிள்டன் ஓபனில் முதல் சுற்றிலேயே தன்னை விட 100 இடங்களுக்கு மேல் பின்தங்கியிருந்த எலிபெத்தா கோசியாரெட்டோவிடம் (இத்தாலி) தோல்வியை தழுவி இருந்தார். இப்போது மீண்டும் அவர் காலிறுதிக்கு முன்பே வீழ்ந்துள்ளார். முன்னாள் கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 18 மாதங்களுக்கு பிறகு களத்துக்கு வந்துள்ளார். முதல் சுற்றில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் போலந்து வீராங்கனை மேக்தலினா ஃபிரிச்சிடம் ஒரு மணி 13 நிமிடங்களில் 6-2, 6-2 என நேர் செட்களில் வீனஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்க வீராங்கனைகளுக்கு இடையிலான மற்றொரு ஆட்டத்தில் டெய்லர் டவுன்செண்ட் 6-3, 6-0 என நேர் செட்களில் தர வரிசையில் முன்னிலையில் உள்ள சோபியா கெனினை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் வெறும் 57 நிமிடங்களில் முடிவை எட்டியது.