வாஷிங்டன்: வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் போலந்து வீராங்கனை மேக்தலீனா ஃபிரெச் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் போலந்து வீராங்கனை மேக்தலீனா ஃபிரெச், உக்ரைன் வீராங்கனை யூலியா வோலோடைமிரிவ்னா ஸ்டாலோடப்ஸ்சேவா மோதினர். துவக்கம் முதல் துடிப்புடன் ஆடிய மேக்தலீனா, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில், போலந்து வீராங்கனை மேக்தா லினெட், அமெரிக்க வீராங்கனை டேனியல் ரோஸ் காலின்ஸ் மோதினர். இப்போட்டியில் முதல் செட்டை, 7-5 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்ற மேக்தா, 2வது செட்டை, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தி வெற்றி வாகை சூடினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரான்ஸ் வீரர் கியோவன்னி பெரிகார்டை, 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்சாண்டர் வுகிக் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.