Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எளிதில் ஷாப்பிங் முடிக்க வேண்டுமா? உங்களுக்காக; இதோ டிப்ஸ்...

ஷாப்பிங் செய்வதற்கு பொறுமை தேவை. அது பெண்களிடம் நிறைய இருப்பதால், அவர்கள் ஷாப்பிங்கில் சிறந்து விளங்குகிறார்கள்..’’ என்கிறது, சமீபத்திய ஆய்வுகள். ஆண்களிடம் பொதுவாக பொறுமை இல்லை என்று ஷாப்பிங்கை பொறுத்தவரை கண்டிப்பாக சொல்லி விடலாம். ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க பல கடைகளுக்கு ஏறி இறங்குவது. அப்படி ஏறி இறங்கினாலும் அலுத்துக்கொள்ளாமல், ஒரு முறைக்கு பல முறை விலை விசாரித்து சரியான பொருளை, சரியான விலைக்கு வாங்குவதே 100 சதவீதம் நிறைவான ஷாப்பிங்கின் சிறப்பு அம்சம். ஷாப்பிங் என்பது ஒரு மகிழ்ச்சியான வேலை என்பது முக்கியம்; அப்படி முதலில் மனதில் நினைத்து விட்டால், ஷாப்பிங் மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிடும். எளிதாக, பாதுகாப்பாக ஷாப்பிங் முடிக்க சில டிப்ஸ்கள்:

பட்டியல்: ஷாப்பிங் செல்வதற்கு முன்னர் நீங்கள் வாங்க வேண்டிய அல்லது வாங்க விரும்பும் பொருள்களை பட்டியல் போட்டு எடுத்துச் செல்லுங்கள். இது நேரத்தை குறைக்க உதவும். சில சமயங்களில் வாங்க வேண்டியதைத் தவிர மற்ற பொருள்களை வாங்கி பணம் காலியாகிவிடுவதை தவிர்க்கலாம். இல்லையென்றால் வாங்க திட்டமிட்ட சில பொருட்களை வாங்கமுடியாமல் செல்லும் நிலை ஏற்படலாம். செலவழிக்கும் பணம் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம், நீங்கள் செலவழிக்கும் நேரம் மிகவும் உன்னதமானது. எனவே அவற்றை வீணாக்கமால் இருக்க ஷாப்பிங் செல்வதற்கு முன் பட்டியலிட்டு செல்லுவது சிறந்தது. பட்ஜெட்: ஷாப்பிங் செல்வதற்கு முன்னர் பட்டியலிடுவது எப்படி முக்கியமோ அதேபோன்று ‘பட்ஜெட்\” போடுவதும் சிறந்த ஷாப்பிங்கிற்கு தேவையானவற்றுள் மிக முக்கியமானதாகும். இதன் மூலம் பணம் வீணாவது தவிர்க்கப்படும். கண்ணில் பார்த்தவற்றை எல்லாம் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தையும் தவிர்த்து தேவையானவற்றை வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம். ஷாப்பிங் சென்று வந்த பின்னர் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதும் தவிர்க்கப்படும். ஷாப்பிங் செய்வதற்கான சிறந்த நேரம்: மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களை ஷாப்பிங்குக்காக தேர்ந்தெடுங்கள். விசேஷ நாட்களில் கடைசிக் கட்டத்தில் ஆடைகள் வாங்கச் செல்லாதீர்கள்.

கூட்டம் அதிகமாக மொய்க்க ஆரம்பித்து, நின்று நிதானித்து தேர்வு செய்ய வசதியில்லாமல் செய்துவிடும். அதோடு, நல்ல துணிகளெல்லாம் விற்றும் தீர்ந்திருக்கும். அதேபோல மிகவும் ஆரம்பக் கட்டத்திலும் செல்லக் கூடாது.

நேரத்தை நிர்ணயித்தல்: ஒரு பொருளை வாங்க செல்லும்போது குறிப்பிட்ட நேரத்தில் அதனை வாங்கி முடிக்க முயற்சிசெய்யுங்கள். தேவையில்லாமல் பட்டியலில் இல்லாத பொருட்களை எல்லாம் பார்க்கும் எண்ணத்தை தவிர்த்து எதை வாங்குவதற்காக சென்றீர்களோ அதை விற்பனை பிரதிநிதியிடம் கேளுங்கள் அல்லது தேர்ந்தெடுங்கள்

பசியோடு நோ ஷாப்பிங்: நீங்கள் சோர்வாக இருக்கும்போது ஷாப்பிங் செல்லாதீர்கள். இதுபோன்ற நேரத்தில் ஷாப்பிங் சென்றால் சரியான பொருட்களை தேர்வு செய்ய முடியாமல் சிரமம் அடைவீர்கள். அதேபோல் பசியுடன் இருக்கும்போது தொடர்ந்து ஷாப்பிங் செல்ல வேண்டாம். இதனால் உடல் சோர்வு ஏற்படும். இல்லையென்றால் வெளியே சென்று கண்டதை சாப்பிட்டு அதற்கு வேறு கொஞ்சம் பணத்தை செலவு செய்ய நேரிடும். எனவே ஷாப்பிங் கிளம்புவதற்கு முன்பு வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்.

இது தேவையானது தானா: ஷாப்பிங் சென்றால் கண்களில் பட்டதையெல்லாம் வாங்கி குவிக்காமல் ஒவ்வொரு பொருளையும் தேர்வுசெய்யும்போதும் இது நமக்கு தேவையானது தானா, மிகவும் அவசியமானதா என்ற கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்போது அந்த பொருள் தேவையா என்பதை முடிவு செய்து விடலாம். இதன் மூலம் நேரம் வீணாவது தவிர்க்கப்படுவதோடு, பணமும் மிச்சமாகும். கூட்டு சேராதீங்க: ஷாப்பிங் செல்லும்போது தனியாக செல்லுங்கள். சிலர் நண்பர்களுடன் ஷாப்பிங் சென்றால் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்வார்கள். இதனால் நமக்கு பிடிக்காவிட்டாலும் நண்பர்களின் கட்டாயத்திற்காக வாங்க நேரிடும். மேலும் வாங்கும் பொருட்களை நாம் தான் பயன்படுத்தப்போகிறோம். அவர்கள் அல்ல அதனால் நமக்கு பிடித்தவற்றை, நமக்கு பிடித்த விலையில் தேர்வு செய்யவேண்டும் என்றால் தனியாக ஷாப்பிங் செல்லுங்கள். துணைக்கு யாரையாவது அழைத்து செல்ல வேண்டும் என்று தோன்றினால் வீட்டில் இருக்கும் பெரியவர்களை அழைத்து செல்லுங்கள். அவர்கள் உடன் வந்தால் சில தேவையற்ற பொருட்களை நாம் வாங்கும்போது வேண்டாம் என்று கண்டிப்பார்கள். இதனால் நமக்கு பணம் மிச்சமாகும்.