சென்னை: தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரை ஏறக்குறைய 77000 அதிகாரிகள் பணிபுரிவர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் இறுதி வாரம் முதல் 2026ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் வரை நடைபெறவுள்ள இச்சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரை ஏறக்குறைய 77000 அதிகாரிகள் பணிபுரிவர்.
இவர்களுக்கு வீடு வீடாக கணக்கெடுப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் ஆகியவற்றை கையாளும் முறைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 624 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 7234 வாக்குச்சாவடி நிலை அலுவலக மேற்பார்வையாளர்கள், 68472 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கு பெறுவர். இந்த பயிற்சிகள் ஆனது தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளால் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
