வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாட்டில் நவ.4ல் தொடக்கம்: டிச.4ம் தேதி வரை ஒரு மாதம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு: டிச.9ல் வரைவு பட்டியல் வெளியீடு: புதுவை, கேரளா உள்பட மேலும் 11 மாநிலங்களிலும் நடக்கிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடெல்லி: பீகாரைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் 2ம் கட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்களில் நடத்தப்பட இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று அறிவித்துள்ளார். இதற்காக, தமிழ்நாட்டில் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள் வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை நடக்க உள்ளது. டிசம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டமாக நடக்க உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில், 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 7.42 கோடி பேர் கொண்ட இறுதிப் பட்டியல் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை கொண்டு தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. பீகாரில் திருத்தப்பணிகள் முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதற்காக, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தியது.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் டெல்லி விக்யான் பவனின் நேற்று செய்தியாளர்களை சந்தித்து, நாடு முழுவதும் 2வது கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளும் மாநிலங்களின் விவரம் மற்றும் தேதிகளை அறிவித்தனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது:
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எந்த மேல்முறையீடு புகார்களும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்காக அங்குள்ள 7.5 கோடி வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது பீகாரைத் தொடர்ந்து 2ம் கட்டமாக 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் அடங்கும். இதுதவிர, அந்தமான், சட்டீஸ்கர், கோவா, குஜராத், மபி, உபி, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடக்க உள்ளன.
இந்த தீவிர திருத்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் இருப்பதையும், தகுதியற்ற வாக்காளர்கள் யாரும் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதுமாகும். மேலும், இந்த நடவடிக்கையில் குடியுரிமைக்கான ஆவணங்களை பெறுவதன் மூலம் வங்கதேசம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கபடுவதை உறுதி செய்ய முடியும்.
இதற்காக பயிற்சி பெற்ற பூத் நிலை அதிகாரிகள் வீடு வீடாக சென்று தீவிர திருத்தத்திற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி அவற்றை பூர்த்தி செய்து பெறுவார்கள். இந்த கணக்கெடுப்பு பணிகள் வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை நடத்தப்படும். இதில் பெற்றப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் வரும் டிசம்பர் 9ம் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும். பின்னர் ஆட்சேபனைகள் தீர்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கும் கணக்கெடுப்புகளை நடத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு தேவையான பணியாளர்களை வழங்க மாநில அரசுகள் கடமைப்பட்டுள்ளன. சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் மாநிலங்களில் நாளை (இன்று) முதல் பூத் நிலை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் விண்ணப்ப படிவங்கள் அச்சிடுக்கும் பணிகள் தொடங்கப்படும். இந்த நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்த அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளை நேரில் சந்தித்து தீவிர திருத்தம் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குரிமையை பறிப்பதோடு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து அவர்களை வாக்காளர்களாக மாற்றும் சதி நடக்க இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
* அசாமில் நடத்தாதது ஏன்?
எல்லையை ஒட்டிய அசாம் மாநிலத்தில்தான் அண்டைநாட்டவர்கள் பலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. பாஜ ஆளும் அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலும் நடக்க உள்ளது. ஆனால், 2ம் கட்ட பட்டியலில் அசாம் மாநிலம் சேர்க்கப்படவில்லை. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகையில், ‘‘குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அசாமில் தனித்தனி விதிகள் உள்ளன. எனவே அசாமிற்கு தனி திருத்த விதிகள் வெளியிடப்படும். அம்மாநிலத்திற்கு தனியாக எஸ்ஐஆர் நடத்தப்படும்’’ என்றார்.
* மேற்கு வங்கத்தில் பணி பாதிக்குமா?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதை தனது மாநிலத்தில் நடத்த விடமாட்டேன் என பிரசாரம் செய்துள்ளார். இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்திற்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கு இடையே எந்த தடையும் இல்லை. தேர்தல் ஆணையம் எஸ்ஐஆரை நிறைவேற்றுவதன் மூலம் அதன் அரசியலமைப்பு கடமையை செய்கிறது.
இதில் மாநில அரசும் அதன் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றும். சட்டம் ஒழுங்கை பராமரித்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை’’ என்றார். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் எஸ்ஐஆர் நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘இன்னமும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்பதால் எஸ்ஐஆர் நடத்தப்படுகிறது’’ என்றார்.
* ஒரே நாளில் 527 அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்: மம்தா அதிரடி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று அறிவித்த நிலையில் மேற்கு வங்கத்தில் 67 ஐஏஸ் அதிகாரிகள் உட்பட 527 அதிகாரிகளை இடமாற்றம் செய்து முதல்வர் மம்தா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன்னும், பின்னும் துறையின் இணையதளத்தில் தொகுதிகளாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இடமாற்றம் செய்யும் அறிவிப்புகள் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடுவதற்கு 3 நாள்களுக்குமுன் அதாவது, 24ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் 67 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள்.
* 51 கோடி வாக்காளர்கள்
முந்தைய தீவிர திருத்த பணிகளின் அடிப்படையில் வெளியான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், 2ம் கட்ட தீவிர திருத்த பணிகள் நடக்கும் 12 மாநிலங்களில் மொத்தம் 51 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர் உள்ளனர். 2005க்குள் வெளியான வாக்காளர் பட்டியலின்படி 12 மாநிலங்களின் வாக்காளர் எண்ணிக்கை:
* 12 ஆவணங்கள் எவை? விண்ணப்பத்துடன் இணைத்து தர தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணப் பட்டியலில் உள்ள 12 ஆவணங்கள்:
* ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டை, ஓய்வூதிய தொகை உத்தரவு
* 1987 ஜூலை 1க்கு முன் அரசு, உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சான்றிதழ்
* பிறப்புச் சான்றிதழ்
* பாஸ்போர்ட்
* பத்தாம் வகுப்பு, கல்விச் சான்றிதழ்
* நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்
* வன உரிமைச் சான்றிதழ்
* ஓபிசி, எஸ்சி, எஸ்டி சான்றிதழ்கள்
* தேசிய குடிமக்கள் பதிவேடு (தேவைப்படும் இடங்களில்)
* குடும்பப் பதிவேடு,
* நிலம், வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்
* ஆதார்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன
* தேர்தல் ஆணையம் நியமித்த பூத் நிலை அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் வீடு, வீடாக வந்து விண்ணப்ப படிவங்களை வழங்குவார்கள்.
* அந்த விண்ணப்ப படிவத்தில் வாக்காளர் பெயர், வாக்காளர் அட்டை எண், முகவரி போன்ற தகவல்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டிருக்கும். இதே போல, பாகம் எண், தொகுதி பெயர், மாநிலம் போன்ற தகவல்களும் அச்சிடப்பட்டதாக இருக்கும். அத்துடன் உங்களின் பழைய புகைப்படம் இடம் பெற்றிருக்கும். இதில் உங்களின் தற்போதைய புகைப்படத்தை மட்டும் ஒட்ட வேண்டும்.
* அடுத்ததாக, பிறந்த தேதி, மொபைல் எண், ஆதார் எண் (விருப்பப்பட்டால் தரலாம்), தந்தை பெயர், அவரது வாக்காளர் அட்டையாள அட்டை எண், தாய் பெயர், அவரது அடையாள அட்டை எண், மனைவி/கணவன் பெயர், அவரது அடையாள அட்டை எண் போன்ற தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். இந்த தகவல்களை நிரப்ப வேண்டும்.
* கடைசியாக எஸ்ஐஆருக்கு பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்திருந்தால் அதன் வாக்காளர் அடையாள அட்டை எண், உறவினர் பெயர், உறவு முறை, மாவட்டம், தொகுதி பெயர் போன்ற தகவல்கள் கேட்கப்படும். இல்லாவிட்டால் உங்கள் குடும்பத்தினர் பெயர் கடைசி எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் அவர்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை தர வேண்டும்.
* கடைசியாக நடந்த தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு தற்போது தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
* தமிழ்நாட்டை பொறுத்த வரையில் 2002, 2005ம் ஆண்டில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உங்கள் பெயர் இருந்தால், விண்ணப்ப படிவத்துடன் வேறெந்த ஆவணங்களையும் தர வேண்டியதில்லை. 2005 பட்டியலில் உள்ள விவரங்களை தந்தால் போதும். 2005ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பார்த்து விவரங்களை பெறலாம்.
* 2005 பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், தேர்தல் ஆணையம் கூறியிருக்கும் 12 ஆவணங்களில் இருந்து ஏதேனும் ஓர் ஆவண நகலை தர வேண்டும்.
* கடைசியாக நாடு முழுவதும் 2002 முதல் 2004க்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது மேற்கொள்ளப்பட இருப்பது 9வது எஸ்ஐஆர்.
