Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில் உள்ளது மோடி-ஆர்எஸ்எஸ் அரசை அகற்றுவோம்: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி சபதம்

புதுடெல்லி: ‘‘வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில் உள்ளது. நாங்கள் சத்தியத்தின் பக்கம் நிற்கிறோம். மோடி-ஆர்எஸ்எஸ் அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவோம்’’ என டெல்லி பேரணியில் ராகுல் காந்தி சபதம் செய்துள்ளார். வாக்கு திருட்டுக்கு எதிராக ‘வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்’ என்ற பிரமாண்ட பேரணி காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று நடத்தப்பட்டது.

இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பல்வேறு மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது: சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அந்தமான் நிக்கோபரில் பேசுகையில், ‘‘உலகம் உண்மையை அல்ல, அதிகாரத்தையே பார்க்கிறது.

யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ, அவர்களே மதிக்கப்படுகிறார்கள்’’ என்றார். எங்கள் சித்தாந்தம், எங்கள் நாட்டின் சித்தாந்தம் மற்றும் எங்கள் இந்து மதம் மற்றும் பிற மதங்கள் உண்மைதான் மிக முக்கியமானது என்று கூறுகின்றன. ஆனால் மோகன் பகவத் ‘உண்மைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, அதிகாரம் மட்டுமே முக்கியம்’ என்கிறார். இந்த சண்டை உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலானது.

உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான இந்த சண்டையில், தேர்தல் ஆணையம் பாஜ அரசுடன் இணைந்து செயல்படுகிறது. பீகார் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பாஜ ரூ.10,000 வழங்கியது. ஆனால் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், பிரேசில் பெண்கள் கூட அரியானா தேர்தலில் வாக்களித்தனர்.

பாஜவால் திருடப்பட்ட அரியானா மற்றும் பிற தேர்தல் குறித்து நாங்கள் கேட்ட எந்த கேள்விக்கும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பாஜவுக்காகப் பணியாற்றுகிறார்கள். பிரதமர் மோடி, தேர்தல் ஆணையத்திற்கு பாதுகாப்பு அளிப்பதற்காக புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

இந்தச் சட்டம் உங்களை (தலைமை தேர்தல் ஆணையர்) பாதுகாப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. உங்களுக்கு தெளிவாகச் சொல்கிறோம். நாங்கள் இந்தச் சட்டத்தை மாற்றி, உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.  பிரதமர் மோடியின் மோடியின் முகத்தைப் பாருங்கள். அவருடைய தன்னம்பிக்கை தளர்ந்துவிட்டது. அமித் ஷாவின் கை நாடாளுமன்றத்தில் நடுங்கியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அமித் ஷா அதிகாரம் இருக்கும் வரை மட்டுமே தைரியசாலி. அதிகாரம் போன அன்றே, அவருடைய தைரியமும் மறைந்துவிடும்.

தங்களின் வாக்கு திருட்டு பிடிபட்டுவிட்டது என்பது அவர்களுக்கு தெரியும். வாக்கு திருடர்களே பதவியை விட்டு விலகுங்கள் என்ற முழக்கம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நேரம் ஆகலாம், ஆனால் உண்மை வெல்லும். மகாத்மா காந்தி சத்தியத்தின் பாதையைக் காட்டியுள்ளார், நாங்கள் அந்தப் பாதையில் பயணிப்போம்.

இந்த வாக்குத் திருட்டு என்பது வெறும் வாக்குகளைத் திருடுவது மட்டுமல்ல, இது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு வாக்கு என்று கூறும் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல். அவர்கள் வாக்குத் திருட்டு மூலம் தங்கள் அரசை நடத்துகிறார்கள். அவர்கள் சிறு தொழில்களை அழித்துவிட்டனர். தவறான ஜிஎஸ்டியை அமல்படுத்தினர். அவர்கள் வாக்கு திருட்டில் ஈடுபடாமல் இருந்திருந்தால், நீங்கள் அவர்களை 5 நிமிடங்களில் அதிகாரத்தில் இருந்து அகற்றியிருப்பீர்கள். இதுதான் உண்மை.

எங்கள் டிஎன்ஏவில் உண்மை இருக்கிறது. பாஜவின் டிஎன்ஏவில் வாக்கு திருட்டும், பொய்யும் இருக்கிறது. வெறுப்பால் அல்ல, வன்முறையால் அல்ல, சத்தியத்துடனும் அகிம்சையுடனும், நாங்கள் மோடியையும் அமித் ஷாவையும் தோற்கடிப்போம். மோடி-ஆர்எஸ்எஸ் அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

பின்னர் அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘ திருட்டு என்பது பாஜவின் டிஎன்ஏவில் உள்ளது. பணத் திருட்டு, நிலத் திருட்டு, நிறுவனத் திருட்டு, உரிமைத் திருட்டு, வேலைவாய்ப்பு திருட்டு, மக்கள் ஆணைத் திருட்டு, அரசாங்கத் திருட்டு, தேர்தல் திருட்டு, வாக்குத் திருட்டு என மக்களிடமிருந்து அனைத்தையும் திருடுவதுதான் பாஜவின் அதிகாரத்திற்கான ஏணி’’ என கூறி உள்ளார்.

* வாக்குச்சீட்டில் நேர்மையுடன் தேர்தலை சந்திக்க தயாரா?

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், ‘‘தேர்தல் ஆணையத்தின் உதவியின்றி பாஜவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷியை இந்த நாடு ஒருபோதும் மறக்காது. அவர்களைப் பாதுகாக்க எவ்வளவு முயற்சிகள் செய்யப்பட்டாலும், ஒரு நாள் அவர்கள் மக்களின் வாக்குரிமையைப் பறிக்க சதி செய்ததற்கு பதிலளிக்க வேண்டும்.

நான் சவால் விடுகிறேன். பாஜ ஒரு முறையாவது வாக்குச்சீட்டு முறையில் நேர்மையான தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்படி செய்தால் அவர்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது, இந்த உண்மை பாஜவுக்கும் தெரியும். வரலாற்றில் முதல் முறையாக, முழு எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும், தேர்தல்கள் முறையாக நடத்தப்படவில்லை என்றும் கூறுகின்றன. அனைத்து நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு அடிபணிய வைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

* பாஜவினர் துரோகிகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘‘பாஜ-ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அரசியலமைப்பை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்துத்துவா என்ற பெயரில் அவர்கள் ஏழைகளை மீண்டும் அடிமைப்படுத்த விரும்புகிறார்கள்.

மனுஸ்மிருதியின் சித்தாந்தம் நாட்டை அழித்து விடும், காங்கிரசின் சித்தாந்தத்தால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். அவர்கள் நேரு, காந்தி, அம்பேத்கருக்கு எதிராக பேசுகிறார்கள். படேலுக்கும் நேருக்கும் இடையே வேறுபாடுகளை விதைக்கிறார்கள். நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். பாஜவினர் துரோகிகள். இந்த துரோகிகளை நீங்கள் அகற்ற வேண்டும். உங்களை பாதுகாக்க விரும்பினால் துரோகிகளை அகற்றுங்கள்’’ என்றார்.