Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாக்களிப்பதற்கு எந்த வசதியும் செய்து தரவில்லை ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தபால் வாக்கு முறை: போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் நாளில் வாக்கு செலுத்த முடியாது என்பதால் அவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் நடைமுறை இருக்கிறது. ஆனால் வாக்குப்பதிவு நாளில் போக்குவரத்து துறையில் இருக்கும் பேருந்து ஓட்டுநர்கள், ரயில்வே பணியாளர்கள் பணிக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அவர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையை கொண்டு வர தொழிலாளர்கள் கோரியுள்ளனர்.

இது குறித்து ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஆறுமுகம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 311 பணிமனைகள் உள்ளது. இதில் சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் உட்பட 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தொலைதூரம் பணிக்குச் செல்லும் புறநகர் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் 19ம் தேதி அதிகாலையில் பேருந்தை இயக்கி நடு இரவில் பணி முடிப்பதால் தங்கள் வாக்குகளை செலுத்த முடியாத பணிச் சூழல் உள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் தொலைதூரத்தில் பணியாற்றக்கூடிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்களது பணி சூழல்களினால் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க முடியாத நிலை தொடர்கிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காண தேர்தல் அன்று பணிக்கு வரும் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்கு முறை உள்ளது போல, தொலைதூர பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் தபால் வாக்குகளை அளிக்கும் முறையை வருங்காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். அன்றைய தினம் அரசு போக்குவரத்து கழக நிர்வாகங்கள் வாக்களிக்க ஏதுவாக பேருந்து இயக்கத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என்றார்.