Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விசாகப்பட்டினத்தில் சாதனை நிகழ்ச்சி; 3.2 லட்சம் பேர் பங்கேற்ற கின்னஸ் யோகா நிகழ்ச்சி: பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பங்கேற்பு

திருமலை: விசாகபட்டினத்தில் 3.2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற கின்னஸ் சாதனை யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். 11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா ஆந்திரா திட்டத்தில் விசாகப்பட்டினம் ஆர்கே கடற்கரையில் இருந்து போகபுரம் வரை யோகாசனம் நிகழ்த்தப்பட்டன. ஒரே இடத்தில் 3.2 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்தனர். இதற்காக பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு அதிகளவில் வந்தனர். இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பலர் யோகாசனங்களை செய்தனர்.

முன்னதாக, யோகாவை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டு பேசுகையில், ‘யோகா தினத்திற்கான முன்மொழிவை 175 நாடுகள் ஆதரித்தன. 175 நாடுகளில் யோகா செய்வது ஒரு எளிய விஷயம் அல்ல. யோகா என்பது மனிதகுலத்தை மேம்படுத்தும் ஒரு கூட்டு செயல்முறை. கடந்த 10 ஆண்டுகளில், யோகா கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கியுள்ளது. கிராமங்களில் உள்ள இளைஞர்கள் யோகாவைப் பின்பற்றுகிறார்கள். யோகாவிற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு, யோகா உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது’ என பேசினார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘யோகா உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வழங்குகிறது. யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒன்றிணைக்கும் வழி. நோய் எதிர்ப்பு சக்தி, தன்னம்பிக்கையை அதிகரிக்க முடியும். யோகா வன்முறையை குறைக்கிறது. அமைதியை ஊக்குவிக்கிறது. யோகாவை உலகளவில் பிரபலப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் யோகாவைச் சேர்க்க பிரதமர் மோடி முயற்சி எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். யோகா நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மக்கள் ஒவ்வொரு நாளும் யோகாவிற்கு ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். யோகாவை ஒரு பயிற்சியாக மட்டுமல்ல, ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் பயிற்சி செய்வோம்’ என்றார். அதேபோல் யோகாவின் சிறப்புகள் குறித்து துணை முதல்வர் பவன் கல்யாண் பேசினார்.

ஐநா அலுவலகம், சீனாவிலும் யோகா

ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் சர்வதேச யோகா தின அமர்வு ஒரு நாள் முன்னதாக நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. யோகா பயிற்சியாளர்கள், தூதர்கள், ஐநா அதிகாரிகள், தூதரக உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் சமூகத்தினர்கள் கலந்து கொண்டனர்.

சீனாவின் பெய்ஜிங்கில் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த யோகாவில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு நகரங்களிலும் பொது மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்திய புலம்பெயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமானவர்கள் இவைகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

  • சியாச்சின் முதல் விசாகப்பட்டினத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கடற்படை கப்பல்கள் வரை இந்திய ஆயுதபடைகள் அனைத்தும் நேற்று சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடித்தன.
  • ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நடந்த யோகா தின கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
  • டெல்லியில் ராணுவத் துணை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் என்எஸ் ராஜா சுப்பிரமணி தலைமையில் கரியப்பா மைதானத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் 25 நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • 175 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 12லட்சம் இடங்களில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 10கோடி மக்கள் பங்கேற்றனர்.

கின்னஸ் சாதனை சான்று

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா தினம் கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. இதில் 3.2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று யோகா செய்தனர். மேலும் 22,122 பழங்குடியின மாணவர்கள் 108 சூரிய நமஸ்காரங்களை நிகழ்த்தி கின்னஸ் சாதனையில் இடம் பெற்றனர். கின்னஸ் பிரதிநிதிகள் அதற்கான சான்றிதழ்களை மாநில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷிடம் வழங்கினர்.