Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வரம்பை மீறி 2 லட்சம் விசாக்கள் விநியோகம்;சென்னை அமெரிக்க தூதரகத்தில் ‘விசா’ மோசடி: பொருளாதார நிபுணர் பகீர் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களில் வெளிநாட்டினர் பணிபுரிய எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவைப் பெறுபவர்களில் இந்தியர்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஆண்டுதோறும் மொத்தம் 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த விசா வழங்க வேண்டும் என்ற உச்சவரம்பு நடைமுறையில் உள்ளது. விசா விதிமுறைகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும், இந்த எண்ணிக்கை வரம்பானது மிகக்கறாராகப் பின்பற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், விசா விநியோகத்தில் பெரும் மோசடி நடந்துள்ளதாக அமெரிக்கப் பொருளாதார நிபுணர் டேவ் பிராட் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ‘சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் எச்-1பி விசாக்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இது மொத்த தேசிய வரம்பான 85 ஆயிரத்தை விட மிக அதிகமாகும். இங்குத் தொழில்முறை அளவில் விசா மோசடி நடக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் பேசியுள்ள முன்னாள் தூதரக அதிகாரி மஹ்வாஷ் சித்திக், ‘தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் விசா பெறுவது வாடிக்கையாக உள்ளது. ஐதராபாத்தில் உள்ள அமீர் பேட்டை பகுதியில் இதற்கெனப் போலி ஆவணங்கள் தயாரித்துத் தரப்படுகின்றன. இந்த மோசடிகளைத் தடுக்க முயலும் அதிகாரிகளுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் தரப்படுகின்றன’ என்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

விசா மோசடி புகார்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விசா கெடுபிடிகளை அதிகரிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் சூழலில், அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் உலகளாவிய திறமையாளர்களை ஈர்ப்பதற்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

போலி சான்றிதழுக்கு அமீர்பேட்டை

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கடந்த 2005 முதல் 2007ம் ஆண்டு வரை அதிகாரியாக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஹ்வாஷ் சித்திக் என்பவர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ‘எனது பணிக்காலத்தில் வழங்கப்பட்ட விசாக்களில் 80 முதல் 90 சதவீதம் வரை போலியான ஆவணங்கள் மற்றும் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மூலம் பெறப்பட்டவை. குறிப்பாக ஐதராபாத் அமீர்பேட்டை பகுதியில் கடைகளில் போலியான சான்றிதழ்கள் விற்கப்படுகிறது. தகுதியற்ற நபர்கள் ஆள்மாறாட்டம் செய்து நேர்முகத்தேர்வில் பங்கேற்கின்றனர். இதுகுறித்து அமெரிக்க அரசிடம் புகார் அளித்தபோது, இந்தியத் தலைவர்களை சமாதானப்படுத்த வேண்டிய அரசியல் நெருக்கடி காரணமாக விசாரணைகள் முடக்கப்பட்டன. அமெரிக்காவில் போதிய திறமையாளர்கள் இல்லை; அதனால் அங்கு இந்தியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். உண்மையில் அமெரிக்கப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை எச்-1பி விசா பறிக்கிறது’ என்றார்.