Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை குடிநீருக்கு ஆதாரமான வீராணம் ஏரி வறண்டது

* கிரிக்கெட் விளையாடி மகிழும் சிறுவர்கள்

வடலூர் : சென்னை குடிநீருக்கு ஆதாரமாக இருக்கும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியானது தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. கோடை காலமான தற்போது இந்த நீர் நிலையானது சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழும் இடமாக மாறியுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீராணம் ஏரி. 47.50 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த ஏரியானது மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

இதன்மூலம் கடலூர் மாவட்ட காவேரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதில் அப்பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் கீழணையில் இருந்து ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் போனது. மேலும் கடும் வெயில் காரணமாகவும், தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தாலும் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஏரி வறண்டது. இதனால் வீராணம் ஏரியின் ஒருபகுதியில், கோடை காலம் என்பதால் விடுமுறையில் வீடுகளில் உள்ள சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1 மாதமாக வடலூர் அருகே உள்ள வாலாஜா ஏரியில் இருந்தும் வடலூர் முதல் பண்ருட்டி வரை போடப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட ராட்சத போர் வெல்கள் மற்றும் நெய்வேலி சுரங்க நீர் ஆகியவை தற்போது சென்னைக்கு தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து வீராணம் குழாய் வழியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியை சென்னை மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் செய்து வருகின்றனர். 5.50 அடி கொள்ளளவு கொண்ட வாலாஜா ஏரியில் தற்போது 4.90 அடி தண்ணீர் உள்ளது. வாலாஜா ஏரியில் இருந்து தண்ணீர் பரவனாற்றில் திறந்து விடப்பட்டு, அங்கிருந்து ராட்சத மோட்டார் மூலம் 40 முதல் 45 எம்எல்டி (மில்லியன் லிட்டர்) தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதுபோல வடலூர் முதல் பண்ருட்டி வரை உள்ள ராட்சத போர்வெல்களில் 10 எம்எல்டி (மில்லியன் லிட்டர்) தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேலும் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ நீர் தென்குத்து பகுதியில் இருந்து 20-25 எம்எல்டி தண்ணீர் எடுக்கப்படுகிறது.

மொத்தமாக ஒரு நாளைக்கு 75 எம்எல்டி தண்ணீர் எடுக்கப்பட்டு நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியில் உள்ள மெட்ரோ வாட்டர் நீரேற்று நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து குழாய் வழியாக சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடும் கோடையில் கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் தொடர்ந்து கடலூர் மாவட்ட பகுதியில் இருந்து சென்னை குடிநீருக்கு தங்கு தடையின்றி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப தண்ணீர் அளவு கூட்டப்படும் என்று மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்தனர். வீராணம் ஏரி வறண்ட நிலையிலும் கடலூர் மாவட்டம் சென்னை குடிநீருக்கு ஆதாரமாக இருந்து வருவது குறிப்

பிடத்தக்கது.