உத்தரபிரதேசத்தில் பின்தொடர்ந்து தொடர் தொல்லை... வாலிபரின் சட்டை காலரை பிடித்து கன்னத்தில் பளார் விட்ட மாணவி: வைரலான வீடியோ
கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரை சேர்ந்த சிறுமி ஒருவர் தினமும் பள்ளிக்கு நடந்து செல்வார். அவரை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று ஒரு வாலிபர் தொல்லை கொடுத்துள்ளார். தகாத வார்த்தைகளாலும் பேசியுள்ளார். இந்த சம்பவம் பல நாட்களாக நீடித்து வந்தது. நேற்று திடீரென அந்த மாணவிக்கு ஆத்திரம் வந்தது. தெருவில் வைத்து, அந்த வாலிபரின் சட்டை காலரை பிடித்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காலணிகளை கழற்றி அடித்தார். கன்னத்தில் அறைந்தும் தக்க பாடம் புகட்டினார். இதனை, பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றனர். சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த சிறுமி, பெரிய கல்லை எடுத்து அந்த வாலிபரை அடிக்கவும் பாய்ந்துள்ளார். பின்னர், கல்லை கீழே போட்டு விட்டார்.இந்நிலையில், கங்காகட் கொத்வாலி காவல் நிலைய பகுதியில் போனி சாலையில் அந்த வாலிபர் மீண்டும், பள்ளி மாணவியை மறித்து, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவி மீண்டும் வாலிபரை சட்டையை பிடித்து தாக்கினார். ஆனாலும் சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கவில்லை. இதையடுத்து அமைதியை சீர்குலைக்க முயற்சித்த பிரிவில் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை போலீசார் பிடித்து சென்றனர். விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் ஆகாஷ் (20) என கண்டறியப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும் ஈ-ரிக்சா ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அதுபற்றிய வீடியோ நேற்று வைரலானது.
சம்பவம் குறித்து கங்காகட் கொத்வாலி போலீஸ் உயரதிகாரி பிரமோத் குமார் மிஷ்ரா கூறுகையில், ‘இந்த சம்பவத்தில் மாணவி புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆனால், அமைதியை சீர்குலைக்க முயற்சித்த பிரிவில் வழக்கு பதிவாகி உள்ளது. இதனால் கைது செய்து, அன்றிரவே ஜாமீனில் ஆகாஷ் விடுதலையானார்’ என்றார்.