Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மீண்டும் வன்முறை வெடித்ததால் தொடர் பதற்றம்; மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் வாபஸ்?: ஒன்றிய அரசுக்கு மாநில அமைச்சரவை அழுத்தம்

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் ஆயுதப்படை அதிகார சிறப்பு சட்டத்தை திரும்ப பெறுமாறு ஒன்றிய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. இதற்கிடையே 19 பாஜக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஓராண்டுக்கு மேலாக மணிப்​பூரில் இரு குழு​வினருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. சமீபத்தில் ஜிரிபாம் மாவட்​டத்​தில் பழங்குடியின இளம்​பெண் சமீபத்​தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வன்முறை​யாளர்​களால் எரித்​துக் கொலை செய்​யப்​பட்​டார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஜிரிபாம் பகுதி​யில் உள்ள வீடு​கள், கடைகளை தீ வைத்து எரித்து குகி இனத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட்டனர். சிஆர்​பிஎப் படையினரின் முகாம் மீது குகி ஆயுதக் குழு​வினர் தாக்​குதல் நடத்தினர். தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்​குதல் நடத்​தி​ய​தில் 10 தீவிரவாதிகள் பலியாகினர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, மைதேயி மக்கள் இருந்த முகாம்களில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மாயமாகினர்.

அவர்களில் மணிப்​பூர் மாநில அரசில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்த லாயிஷ்ராம் ஹீரோஜித்​தின் மனைவி, அவரது 2 குழந்தை​கள், மாமி​யார், மனைவி​யின் சகோதரி உள்ளிட்ட 6 பேர்​ தான் மாயமாகினர். இந்நிலை​யில் போரோபெக்​ரா​வில் இருந்து 16 கி.மீ. தொலை​வில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தை​களின் உடல்கள் நேற்று முன்​தினம் இரவு கண்டெடுக்​கப்​பட்டன. மேலும் 3 பேரின் உடல்கள் நேற்று பிற்​பகல் கண்டெடுக்​கப்​பட்டன. மாயமான 6 பேரின் உடல்​கள்​தான் இவை என்பதை போலீ​சார் உறுதி செய்​தனர். அழுகிய நிலை​யில் மீட்கப்பட்ட உடல்​கள், பிரேதப் பரிசோதனைக்காக எஸ்எம்​சிஎச் மருத்​துவ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டன.

இதற்​கிடையே 6 பேரின் உடல்கள் கண்டெடுக்​கப்​பட்ட செய்தி பரவியதால், ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்​டங்​களில் பதற்​றம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாவட்​டங்​களில் உள்ள பள்ளி​கள், கல்லூரி​களுக்கு நேற்று விடு​முறை அறிவிக்​கப்​பட்​டது. ஊரடங்கு உத்தர​வும் அமல்​படுத்​தப்​பட்டு, கூடுதல் போலீசார், துணை ராணுவ படையினர் குவிக்​கப்​பட்​டனர். 7 மாவட்டத்தில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதற்கிடையே வன்முறையாளர்கள், கொலை செய்யப்பட்டவா்களுக்கு நீதி கேட்டும், ராணுவ சிறப்பு சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் மணிப்பூரின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பெரும் போராட்டம் நடத்தினர்.

இம்பாலில் வசிக்கும் 3 அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகனும், பாஜக எம்எல்ஏவுமான ஆர்.கே.இமோ உட்பட 6 பாஜக எம்எல்ஏக்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். சாலைகளில் டயர்களை எரித்து, போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். கடைகள், வா்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல இடங்களில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர். பல மாதங்களுக்கு பின் மீண்டும் வெடித்துள்ள போராட்டங்களால் மணிப்பூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதியை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படையினருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூரின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், ஆளுங்கட்சியை சேர்ந்த 19 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஏற்கனவே கடந்த மாதம் மாநில முதல்வரை மாற்றக் கோரி, பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதேநேரம் மணிப்பூரில் உள்ள சில அமைப்புகள், அடுத்த 24 மணி நேரத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசுக்கு கெடு விதித்துள்ளன. மணிப்பூரில் ஆறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆயுதப்படை சிறப்பு சட்டங்களை ஒன்றிய அரசு மீண்டும் அமல்படுத்தி உள்ளதால், அந்த சட்டத்தை திரும்ப பெறுமாறு ஒன்றிய அரசை மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு மாநில இணைச் செயலாளர் (உள்துறை) எழுதிய கடிதத்தில், ‘கடந்த 15ம் தேதி நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், மணிப்பூரில் ஆயுதப்படை அதிகார சிறப்பு சட்டத்தை மீண்டும் அமல்படுத்தியது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதைய சூழலில், இந்த சட்டத்தை மறுஆய்வு செய்து ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஆயுதப்படை அதிகார சிறப்பு சட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 14ம் தேதி தொடங்கி அடுத்த 6 மாதத்திற்கு மணிப்பூரின் குறிப்பிட்ட இடங்களுக்கு அமல்படுத்தியது. மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதை எதிர்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.