Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் தோல்வி; கடவுள் உங்களை தண்டித்தார்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிஜ் பூஷண் விமர்சனம்

புதுடெல்லி: ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விளையாட்டில் கலந்து கொள்வதற்காக ஏமாற்றினார். அதனால் அவரை கடவுள் தண்டித்ததால், அவரால் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் விமர்சித்துள்ளார். பாஜக முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். அவருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் முன்னிலை வகித்தனர். அவர்கள் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் கட்சியின் வேட்பாளராக வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

பஜ்ரங் அகில இந்திய விவசாய காங்கிரஸின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம், பாஜவுக்கு எதிரான காங்கிரஸின் சதி என்று பாஜ தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிஜ்பூஷன் கூறியதாவது: ஒரு விளையாட்டு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்ள முடியுமா என்று நான் வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன். எடை கூடிய பிறகு ஐந்து மணிநேரம் சோதனையை நிறுத்தி வைக்க முடியுமா? நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றியே அங்கு நீங்கள் சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்றீர்கள். அதற்காக கடவுள் உங்களை தண்டித்துள்ளார்.

2012ம் ஆண்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் தேர்தலில் அப்போதைய அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் மகன் தீபேந்தர் ஹூடா போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நான் வெற்றி பெற்றேன். தீபேந்தர் ஹூடா தோல்வியடைந்ததால் பூபிந்தர் சிங் ஹூடா திட்டமிட்டு சதி செய்து எனக்கு எதிராக குற்றம்சாட்டி போராட்டங்கள் தூண்டி விடப்பட்டன. உண்மையில் மல்யுத்த வீரர்கள் நடத்தியது போராட்டம் இல்லை. இந்த போராட்டத்தின் பின்னணியில் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இருந்தனர். தற்போது வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் காங்கிரசில் இணைந்தது மூலம் இது உறுதியாகி உள்ளது அரியானாவில் எந்த ஒரு பாஜ வேட்பாளரும் வினேஷ் போகத்தை எளிதில் தோற்கடிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

தவறு செய்கிறவர்களுக்கு ஆதரவாக பா.ஜ நிற்கிறது; காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா கூறுகையில்,’ யாரெல்லாம் தவறு செய்கிறார்களோ அவர்களுடன் பாஜ நிற்கிறது. தவறு செய்பவர்களும் பாஜவுடன் சேர்கிறார்கள். யாருக்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அவர்களுக்காக காங்கிரஸ் போராடுகிறது. அவர்களின் குரல்களை உயர்த்துகிறது. எதிர்காலத்திலும் காங்கிரஸ் இதைச் செய்யும் அதனால்தான் பாதிக்கப்பட்டவர்கள் காங்கிரஸை விரும்புகிறார்கள். பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஆறு மல்யுத்த வீராங்கனைகள் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அவர் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பார்த்தீர்களா? இவ்வாறு பேசுவதற்கு அவருக்கு எவ்வாறு தைரியம் வருகிறது? எங்களின் மகள்களுடன் நின்றதற்காக, நிற்பதற்காக, நிற்கப்போவதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் மகள்களுடன் நின்றதற்காக நாங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டோம். அவர்கள் தான் வருத்தப்படுகிறார்கள். ஹூடா குடும்பத்தினர் தங்களின் குரலை எழுப்பியதன் மூலம் என்ன தவறு செய்து விட்டார்கள்?. அதுதான் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களுடன் (மல்யுத்த வீரர்கள்) நிற்காவிட்டால் அரசியலில் இருந்து என்ன பயன்?’ என்று கேள்வி எழுப்பினார்.