*ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தில் நேற்று பலத்த காற்று வீசியது. இதில், நூலகத்திற்கு அருகே தேனி பிரதான சாலையோரம் இருந்த 30 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தின் ஒரு பகுதி கிளைகள் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது.அதிர்ஷ்டவசமாக அப்போது அந்தப் பகுதியில் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை.
தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயிலாடும்பாறை தீயணைப்பு வீரர்கள் மூலம் சாலையின் குறுக்கே விழுந்த மரக்கிளையை வெட்டும் பணிகளில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே மரக்கிளை விழுந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக உப்புத்துரைக்கு அதிக அளவிலான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் மரக்கிளை உடைந்து விழுந்ததால் சாலையின் இரண்டு புறமும் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு மரக்கிளைகள் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. அதன் பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இதற்கிடையே அதே மரத்தில் மேலும் சில கிளைகள் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதையடுத்து சில நிமிடங்கள் மீண்டும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.
மரம் விழுந்து பெண் சாவு
கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுதா (50). இவர் கேரளா மாநிலம் குமுளி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சக்குப்பள்ளம் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கு சொந்தமான ஏலக்காய் எஸ்டேட்டில் வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கிருந்த மரக்கிளை சுதா மீது முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் சுதாவை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக புத்தடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து குமுளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.