Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பாஜவும், பாமகவும் போட்டியிட முடிவு: மக்களவை தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்குள் வந்தது குழப்பம்

சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தேர்தலில் பாஜவும், பாமகவும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் ஜூன் 14ம் தேதி துவங்குகிறது. 21ம் ேததி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் இன்னும் 2 நாட்களில் துவங்க உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இறங்கின.

இந்நிலையில் திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பிரிக்கப்பட்டதிலிருந்து திமுக இரண்டு முறையும், அதிமுக ஒரு முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன.  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது.

அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட அக்கட்சியில் அவ்வளவாக ஆர்வமில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், ஏசாலம் பன்னீர் மற்றும் முன்னாள் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட சிலர் சீட்டு கேட்டுள்ளனர். அதே நேரத்தில் பாமகவும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜவும் போட்டியிட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பாஜ தரப்பில் போட்டியிட மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத், கலிவரதன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பேருமே பாமகவில் இருந்து வெளியேறி பாஜவில் இணைந்தவர்கள். பாமக சார்பில் அந்த தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வி அடைந்த வன்னியர் சங்க மாநில துணை தலைவர் அன்புமணி, விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் சிந்தாமணி புகழேந்தி உள்ளிட்ட சிலர் சீட் கேட்டுள்ளனர். அதேசமயம், மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் பாமக இடம்பெற்றது. மேலும் இரண்டு கட்சிகளிலும் தொண்டர்கள் போட்டியிட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இதனால், இடைத்தேர்தலில் பாஜ போட்டியிட போகிறதா அல்லது பாமக போட்டியிட போகிறதா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியான பாஜவுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதனால் இடைத்தேர்தலில் யார் போட்டியிட போகின்றனர் என்ற குழப்பம் பாஜ கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஓரிரு நாளில் முடிவு தெரியவரும். அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அந்தஸ்து பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி முதல் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.