Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குப்பதிவு; அதிமுக, தேமுதிக தலைவர்கள் புறக்கணித்தாலும் வளைத்து குத்திய தொண்டர்கள்: இதுவரை நடந்த தேர்தல்களை விட அதிக வாக்குகள் பதிவு

சென்னை: விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இடைத்தேர்தல் என்றாலே வழக்கமாக வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில், அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேபோன்று அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் தொண்டர்கள் யாரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என்று பிரேமலதா மற்றும் அதிமுக தலைவர்கள் தெரிவித்தனர்.

இதனால் இடைத்தேர்தலில் வாக்கு பதிவு குறையும் என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமாக சென்று வாக்களித்தனர். இதனால் மாலை வாக்குப்பதிவு முடிந்தபோது 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2019 இடைத்தேர்தலை விட 6.48 சதவீதம் கூடுதலாகும். கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இங்கு 72.78 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை ஒப்பிடுகையில் இந்த இடைத்தேர்தலில் 9.7 சதவீதம் அதிகமாகும். அதன்படி பார்த்தால், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் வாக்குப்பதிவை ஒட்டு மொத்தமாக புறக்கணித்திருந்தால் வாக்கு பதிவு சதவீதம் வெகுவாக குறைந்திருக்கும். ஆனால் அக்கட்சியின் தலைவர்களும், முக்கிய நிர்வாகிகள் மட்டுமே வாக்கு பதிவை தவிர்த்துள்ளது தெரியவருகிறது. அக்கட்சிகளின் தொண்டர்கள் உள்ளிட்டவர்கள் யாவரும் வாக்குப்பதிவை புறக்கணிக்காமல் வளைத்து வளைத்து வாக்களித்ததால் தான் இந்த அளவுக்கு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.