Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எதிரொலி 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்: ஈவிகேஎஸ். இளங்கோவன் உறுதி

ஈரோடு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என ஈரோட்டில் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார். ஈரோட்டில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய அளவில் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், 10 இடங்களில் இந்தியா கூட்டணியும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பாஜ 2 இடத்தில்தான் வெற்றி பெற்றுள்ளது. இது பிரதமர் மோடிக்கு விழுந்த மற்றொரு அடியாக நான் கருதுகிறேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதற்கு மக்களின் ஆதரவாக திமுக வெற்றி அமைந்துள்ளது. பாமகவிற்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும் என்று ஏற்கனவே கூறினேன். ஏனென்றால் அக்கட்சியுடன் இணைந்தவர்கள் மிகவும் மோசமானவர்கள்.

விக்கிரவாண்டியில் அதிமுகவின் ஓட்டு மட்டும் அல்ல, அனைத்து தமிழர்களின் ஓட்டும் திமுகவிற்கு சென்றுள்ளது. இந்த இடைத்தேர்தலின் வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். அந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று, எதிர்த்து நிற்கும் கட்சிகள் டெபாசிட் இழக்கும். பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு, காமராஜரை பற்றி என்ன தெரியும். அவருக்கு காமராஜர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றியும் தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் பழனிசாமிதான். எனவே, அண்ணாமலை தனக்கு தெரியாதவர்கள் பற்றி பேசக்கூடாது. இவ்வாறு ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறினார்.