Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நாளை எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை: துரை வைகோ தகவல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை நாளை நடைபெறுகிறது என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 25ம் தேதி வைகோ நெல்லை சென்றார். பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் வைகோவிற்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை நாளை நடைபெறுகிறது என துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதிமுக தலைவர் வைகோ நேற்று முன்தினம் கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அறிந்து, முதலமைச்சர் மு.க. என்னை அழைத்து தலைவர் உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். நாளை தலைவரை அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்த இருப்பதால் அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்வர் தெரிவித்தார்கள்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு பதற்றத்துடன் வைகோ உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்கள். வைகோ தன்னுடைய அறுபதாண்டு கால அரசியல் பொதுவாழ்வில் நிறைய தியாகங்களை செய்திருக்கிறார். அரசியலில் இழந்தது அதிகம். ஆனால், தலைவர் அவர்கள் தன்னுடைய நேர்மையால், தியாகத்தால், கொள்கை உறுதியால், விடா முயற்சியால், போர்க்குணத்தால் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறார். அதனால் தான், அரசியல் எல்லைகளை கடந்து அவரின் மீது உள்ள உயர்ந்த மதிப்பால், அன்பால் தலைவர் நலம்பெற வேண்டும் என அனைவரும் தங்கள் விருப்பத்தை என்னிடம் அலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார்கள்.

வைகோ மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார்கள். சிறிய அறுவை சிகிச்சை தான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. மருத்துவர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனிடையே தலைவர் உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட அற்பத்தனமாக முயற்சிக்கிறார்கள். தலைவருக்கு எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார். எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார்.

அவருக்கு மிகவும் பிடித்தமான டென்னிஸ் இப்பொழுது நடைபெறுகிற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார். தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார். எனவே தலைவர் பற்றி வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள். மதிமுக தோழர்கள் உள்ளிட்ட தலைவரின் மீது அன்பு கொண்ட பலர் ஆர்வ மிகுதியிலும், கவலையிலும் தலைவரை நேரில் சந்திக்க வருகிறோம் என, என்னிடம் தெரிவித்து வருகிறார்கள். நம்முடைய வருகையால் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பிற நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதால், யாரும் தலைவரை சந்திக்க வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்புவார். அதன்பிறகு தோழர்கள் அவரை சந்திக்கலாம். அதுவரை, நேரில் வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வைகோ மீது அக்கறையும், அன்பும் கொண்டு நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள், தலைவர் வைகோவின் சுவாச காற்றாக விளங்கும் மறுமலர்ச்சி சொந்தங்கள் அனைவருக்கும் என் நன்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.