விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் கைதாகிறார்கள்? ‘நிகழ்ச்சியை நாங்க ஏற்பாடு செய்யல... மாவட்ட செயலாளர்தான் செஞ்சாரு...’ என ஐகோர்ட்டில் வாதம்
மதுரை: கரூரில் நடிகர் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியாகின. இதனால், இருவரும் எந்நேரமும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதற்கு முக்கிய காரணம் 7 மணி நேரம் தாமதமாக விஜய் வந்ததும், நாமக்கல் மற்றும் கரூர் எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்ததும் தான் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கரூர் போலீசார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் தவெக மாவட்ட தலைவர் மதியழகன் உள்ளிட்டோர் மீது மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி எம்.ஜோதிராமன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘‘போலீசாரின் எப்ஐஆரில் எங்களிடம் அறிவுரை வழங்கியும் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அது என்ன என கூறவில்லை.
எங்களது கட்சித் தொண்டர்களை நாங்கள் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே காக்க வைத்து தாமதமாக வந்ததுபோல கூறப்பட்டுள்ளது. எப்ஐஆரில் தவறான பல தகவல்கள் உள்ளன. இது திட்டமிட்ட செயல் அல்ல. விபத்து தான். அதிகளவில் மக்கள் போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதாலும், குறுகிய சாலை என்பதாலும் இருபக்கமும் மறைக்கும் நிலை வருமெனக்கூறி அனுமதி மறுத்திருக்கலாம். வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கோரிய போது காவல்துறை இதனை செய்திருக்கலாம். எங்களுக்கு அது குறித்து தெரியவில்லை.
ஒட்டுமொத்த மக்களும் கூடிய நிலையில் காவல்துறை தடியடி நடத்தினர். வெவ்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்திய போது, மக்கள் கூட்டம் வந்தது. இங்கும் வருமென காவல்துறை கணித்திருக்க வேண்டும். நாங்கள் அதில் புலமை பெற்றவர்கள் அல்ல. ஒரு நாளைக்கு முன்பே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் முறையிட இயலவில்லை. அதனால் வேலுச்சாமிபுரத்தில் நடத்தும் நிலை ஏற்பட்டது. காலியான ஆம்புலன்ஸ் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது.
கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்? யார் மீதும் தவறு இருக்கலாம். விபத்துகளை விபத்துகளாக பார்க்க வேண்டும். அதற்காக பொதுச்செயலாளர் மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும். கட்சித்தலைவரை பார்ப்பதற்காக கூட்டத்தினர் காத்திருக்கின்றனர். சிலர் கூட்டத்தில் காலணி மற்றும் சில ரசாயனங்களை எறிந்தனர். உடனே, காவல்துறையினர் எவ்வித எச்சரிக்கையும் கொடுக்காமல் தடியடி நடத்தினர். இதன் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
காவல்துறையினரே சரியாக கையாள தவறிவிட்டனர். எச்சரிக்கையின்றி தடியடி நடத்தப்பட்டதன் காரணம் என்ன? ஸ்பிரே பயன்படுத்தியுள்ளனர். நடிகர் ஷாருக்கான் வழக்கில், குற்றவியல் வழக்கு பதியவில்லை. நீதிமன்றம் இவ்வாறு நடக்க வேண்டுமென்ற நோக்கில் இவ்வாறு நடைபெறவில்லையே என குறிப்பிட்டது. கூட்டம் அதிகமிருப்பதால், நிகழ்வை ரத்து செய்யுமாறு காவல்துறை கூறியிருக்கலாம். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு உள்ளது.
ஆனால் கடமையைச் செய்யாமல் காவல்துறையினர் கட்சியினர் மீது குற்றம் சுமத்துகின்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தான். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. இந்த சம்பவத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. காவல் துறை தனது கடமையில் இருந்து தவறிவிட்டது’’ என கூறப்பட்டது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடியாகியுள்ளன.
மனுதாரர்கள் மீது கொலை வழக்கு பதியப்படவில்லை. அரசியல் காரணமாக இருந்திருந்தால் கொலை வழக்கு பதிவு செய்திருக்கலாம். 105 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சிலர் இன்னும் சிகிச்சை பெறுகின்றனர். கூட்டநெரிசலுக்கு காரணமானவர் யார் என கண்டறிய விசாரணை அவசியம். அது தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது. மனுதாரர்கள் இருவரும் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். 12 மணிக்கு தலைவர் வருவார் என இவர்கள் தான் அறிவித்தனர்.
ஆனால், 7 மணி நேரம் தாமதமாக வந்துள்ளார். அதுவரை கூட்டத்தினருக்கு தண்ணீர், உணவு எதுவும் வழங்கப்படவில்லை. 41 பேர் இறந்த பிறகு பொறுப்பான தகவல்கள் இவர்களிடம் இல்லை. ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை. ஆனால் நடத்தியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்க முடியும். கூட்டத்தினருக்கு தலைவர்கள் என்ற முறையில் இவர்கள் எந்தவித அறிவிப்பும் கொடுக்கவில்லை. மரம், கட்டிடங்கள் என அனைத்திலும் ஏறினர்.
மரம் உடைந்து விழுந்தது. ஆனாலும் இவர்கள் கூட்டத்தினரை கண்டுகொள்ளவில்லை. கட்சியினரிடம் அவர்கள் தலைவர்கள் தான், அமைப்பு ரீதியாக அறிவுறுத்த முடியும். போலீசார் நேரடியாக அறிவுறுத்த முடியாது. 23 கிமீ தூரத்தை கடக்க இரண்டரை மணி நேரத்திற்கு மேலாகியுள்ளது. விரைவாக நடக்க வேண்டுமென போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. சம்பவம் நடைபெற்றதும் இவர்கள் அனைவரும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர். முதலுதவி, மருத்துவ உதவி உள்ளிட்டவற்றைக் கூட செய்யவில்லை.
தலைமறைவாக உள்ளவர்கள் எப்படி முன்ஜாமீன் ேகார முடியும். இவர்கள் தான் கட்சியினரை கட்டுப்படுத்த முடியும். ஆனால், அவர்கள் இதை செய்யவில்லை. நீரிழப்பு மற்றும் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு ஏற்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். கேரவனில் 4 மூலைகளிலும் சிசிடிவி கேமரா உள்ளது.
அவற்றில் பதிவான காட்சிகளை போலீசிடம் வழங்க வேண்டும். விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. இந்நிலையில் முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும். 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சம்பவ பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலணிகள் கிடந்தன. ஆனால், ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை. எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது. மனுதாரர் ஆனந்த் புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர்.
அவர் முன்ஜாமீன் கோரி இங்கு மனு செய்ய முடியாது. எம்பி-எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தான் மனு செய்ய முடியும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் நிலையையும் இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் மனுதாரர்களுக்கு அதற்கான பொறுப்பும் உள்ளது.
கூட்டத்திற்கான அனுமதி பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை உள்ளதாக மனுதாரர் தரப்பு கூறுகிறதே? ரோடுஷோ நடத்த அனுமதியில்லை என்றால் அதை ரத்து செய்திருக்கலாமே?’’ எனக் கூறி மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி ஒத்திவைத்தார். பின்னர் மனுக்களின் மீது தீர்ப்பளித்த நீதிபதி அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று இருவரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். அதில், ‘‘மனுதாரர்கள் இருவரும் வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் குற்றவாளியான மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். 41 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் ஐசியூவில் உள்ளனர். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்க முடியாது’’ எனக் கூறி தள்ளுபடி செய்தார். ஐகோர்ட் கிளையில் இருவரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடியான நிலையில், இவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இருவரும் எந்நேரமும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
* அந்த பஸ்சுக்குள் அப்படி என்னதான் இருக்கிறது? நீளம் 33 அடி. அகலம் 12 அடி. உயரம் 11 அடி
யாருமே பிரசாரத்திற்கு பயன்படுத்த முடியாத பஸ்
பிரசாரத்துக்காக விஜய் பயன்படுத்தும் பஸ், ஜேசிபிஎல் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. இதன் அகலம் மட்டும் 19 அடியாகும். இது வழக்கமான பஸ்சை விட அதிக அகலம் கொண்டதாகும். தற்போது இந்த பஸ் பனையூரில் உள்ளது. அந்த வாகனம் தவெக கட்சியின் கொடி நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. அதில் கட்சியின் கொடி இடம்பெற்றுள்ளது. மேலும் அண்ணா, எம்ஜிஆருடன் விஜய் நிற்பது போன்று படம் உள்ளது.
மேலும் உங்கள் விஜய் நா வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற வாசகங்களுடன் 1967, 1977, 2026 என்ற ஆண்டுகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த வாகனத்தை சுற்றி கேமராக்களும் உள்ளன. விஜய் பேசுவதற்கான மைக்கும் அதில் இடம்பெற்றுள்ளது. கேரவனில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த வாகனத்தில் உள்ளன. பஸ் உள்ளே முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பஸ்சுக்குள் மினி பெட்ரூம் உள்ளது.
இங்கு விஜய் ஓய்வெடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிறிய மீட்டிங் அறை இருக்கிறது. அங்கு 5 சொகுசு சேர்கள் போடப்பட்டுள்ளது. இதில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசிக்க ஏற்பாடு செய்யும் வகையில் இருக்கிறது. மூன்றாவது கட்டமாக, இரண்டு பேர் அமரும் வகையில் தனித்தனி சொகுசு நாற்காலிகள் உள்ளன. இதில்தான் விஜய், ஆதவ் அர்ஜுனா அமர்ந்து செல்கிறார்கள்.
இது தவிர, பெரிய டிவி, ரெப்ரிஜெரேட்டர், குளியல் அறை, டாய்லெட் வசதிகளும் இடம்பெற்றுள்ளது. மினி கிச்சன் ஒன்றும் இருக்கிறது. பிரசாரத்தின்போது, ஜூஸ், தேநீர், உணவுகள் சமைக்க இங்கு சமையல்காரர் ஒருவர் இருப்பாராம். இந்த பஸ்சின் விலை மட்டும் ரூ.1.25 கோடி என கூறப்படுகிறது. சினிமா படப்பிடிப்பு தளங்களில் 10 பேர் ஓய்வு எடுப்பதற்குதான் இதுபோன்ற பஸ்களை பயன்படுத்துவார்கள். அதற்கான இன்ஜின்தான் இந்த பஸ்சுக்கும் பயன்படுத்தியுள்ளனர்.
பஸ்சின் வெளிப்புறத்தில் 8 கே ரெசூலேஷன் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்சின் நீளம் 33 அடி. அகலம் 12 அடி. உயரம் 11 அடி. இதுபோன்ற அமைப்புள்ள ஒரு பஸ்சை யாருமே பிரசாரத்துக்கு பயன்படுத்த முடியாது. ஆர்டிஓ மூலம் முறையான சோதனை நடத்தினால், இந்த பிரசார பஸ்சுக்கே தடை போடலாம். அந்த அளவுக்கு விதிமீறலுடன் இந்த பஸ் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* முக்கிய வாதங்களும்... நீதிபதி உத்தரவும்...
* நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தான். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது.
* 41 பேர் இறந்த பிறகு பொறுப்பான தகவல்கள் இவர்களிடம் இல்லை. ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை. ஆனால் நடத்தியுள்ளனர்.
* போலீஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்க முடியும். கட்சியினரிடம் அவர்கள் தலைவர்கள் தான், அமைப்பு ரீதியாக அறிவுறுத்த முடியும். போலீசார் நேரடியாக அறிவுறுத்த முடியாது.
* சம்பவம் நடைபெற்றதும் இவர்கள் அனைவரும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர். முதலுதவி, மருத்துவ உதவி உள்ளிட்டவற்றைக் கூட செய்யவில்லை.
* தலைமறைவாக உள்ளவர்கள் எப்படி முன்ஜாமீன் ேகார முடியும். இவர்கள் தான் கட்சியினரை கட்டுப்படுத்த முடியும். ஆனால், அவர்கள் இதை செய்யவில்லை.
* நீரிழப்பு மற்றும் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு ஏற்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.
* கேரவனில் 4 மூலைகளிலும் சிசிடிவி கேமரா உள்ளது. அவற்றில் பதிவான காட்சிகளை போலீசிடம் வழங்க வேண்டும்.
* சம்பவ பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலணிகள் கிடந்தன. ஆனால், ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை. எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது.
* மனுதாரர் ஆனந்த் புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர். அவர் முன்ஜாமீன் கோரி இங்கு மனு செய்ய முடியாது. எம்பி-எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தான் மனு செய்ய முடியும்.
* இந்த வழக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் நிலையையும் இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் மனுதாரர்களுக்கு அதற்கான பொறுப்பும் உள்ளது.
* 41 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் ஐசியூவில் உள்ளனர். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்க முடியாது.